
“ஏஏஏ” படத்தில் வயதான வேடத்தில் நடிப்பதற்காக உடல் எடையை கூட்டிய சிம்பு, தற்போது அதனை குறைக்க முடியாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கதாபாத்திரங்களுக்கு ஏற்ப ஹீரோக்கள் உடலை கூட்டுவதும், குறைப்பதும் காலம் காலமாக தமிழ் சினிமாவில் நடைபெறும் ஒரு வழக்கமான விஷயம் தான். ஸ்டைலை நம்பும் ஹீரோக்களை விட நடிப்பை நம்பும் ஹீரோக்கள் தான் பெரும்பாலும் இந்த முயற்சியில் ஈடுபடுவது வழக்கம். சிவாஜி, கமல், விக்ரம், சூர்யா, அஜீத் உள்ளிட்ட பல ஹீரோக்கள், பல படங்களில் தங்களின் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல் எடையை கூட்டியும், குறைத்தும் நடித்துள்ளனர். ஆனால் தங்களின் ஸ்டைலால் பல லட்ச ரசிகர்களை கொண்ட ரஜினி, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் பெரும்பாலும் இந்தமாதிரி முயற்சிகளில் ஈடுபடுவதில்லை.
இதே பாணியை கடைபிடித்து வந்த நடிகர் சிம்பு முதல்முறையாக “ஏஏஏ” படத்தில் அஸ்வின் தாத்தா கதாபாத்திரத்திற்காக பெருமளவு எடையை கூட்டினார். இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு சமயங்களில் வேறு எந்த புதிய படத்தையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. எந்த இயக்குனரும் அவரை தேடி வரவில்லை என்பது தான் உண்மை. தற்போது “ஏஏஏ” படம் ரிலீசாகி பலரின் வரவேற்புகளுக்கும், கண்டனங்களுக்கும் ஆளாகியுள்ள நிலையில், உடல் எடை கூடியபடி உள்ள சிம்புவிற்கு தற்போது கையிருப்பில் ஒரு படம் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. “ஏஏஏ” பட இரண்டாம் பாகத்தில் சில காட்சிகள் மட்டும் எஞ்சியுள்ள நிலையில், உடல் எடையை குறைக்க சிம்பு தற்போது பெருமளவு முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளவந்தான் படத்திற்காக பல கிலோ எடையை கூட்டிய கமல் அதனை குறைக்க முடியாமல் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டார்.
அந்த இடைப்பட்ட காலத்தில் கூட உடல் எடைக்கு ஏற்றார் போல பம்மல்.கே.சம்பந்தம், அன்பே சிவம் போன்ற படங்களை கமல் தேர்ந்தெடுத்து நடித்தார். சரியான திட்டமிடலும், உடல் உழைப்பும் இருந்ததால் தான் வாரணம் ஆயிரம் படத்திற்கு பின் சூர்யாவும், அந்நியன், ஐ படத்திற்கு பின் விக்ரமும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதே பாணியை சிம்புவும் கடைபிடித்திருந்தால், தற்போது படமில்லாமல் முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்கிறார்கள் விஷயமறிந்தோர்.