சிறு குழந்தையாக இருந்த போதே கர்னாடக சங்கீதத்தின் மீது இவருக்கு உள்ள பிடிப்பை அவர் உணர ஆரம்பித்து விட்டார். பாலக்காட்டில் பிறந்து வளர்ந்த மஹதியின் பாடும் திறமையை வளர்க்கவே அவரது அப்பா சென்னைக்கு அழைத்து வந்தார். இளையராஜாவின் இசையில் காதல் ஜதி படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமான மஹதிக்கு, நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் பாடியதற்காக தமிழக அரசின் சிறந்த பின்னனி பாடகி விருது கிடைத்தது.
முதல் கச்சேரி: 2001ஆம் ஆண்டிலிருந்து மார்கழி கச்சேரியில் பாட ஆரம்பித்தேன். அன்றிலிருந்து இன்று வரை நான் எங்கு இருந்தாலும் மார்கழியை மிஸ் செய்ததே இல்லை.
மறக்கமுடியாத மார்கழி: 1988இல் என் அம்மாவோடு ஒரு கச்சேரிக்கு போயிருந்தேன். அதில் பாடகர் பாடப் பாட, நான் அதன் ராகத்தை கண்டுபிடித்துக் கொண்டிருந்தேன். அந்த சபா மேனேஜர் என்னை ஸ்டேஜுக்கு கூட்டிட்டுப் போய் ராகங்களை கண்டுபிடிக்க சொன்னார். அந்த கச்சேரிதான் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.
சினிமாவா? கர்னாடக இசையா?: சினிமா பாடல்கள் பாடுவதற்கு ரொம்ப ஈசியானது என்றும், கர்நாடக சங்கீதத்தில் ஒன்றுமே இல்லை என்றும் பலர் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அது டோட்டல் மிஸ்டேக். இது இரண்டையும் அறிந்து, புரிந்துகொள்ள இசையின் மீது காதலும் ஈடுபாடும் இருக்க வேண்டும். இரண்டுமே வெவ்வேறு பாதை. பாடும்போது ஒன்றின் சாயல் மற்றொன்றில் வராமல் பார்த்துக் கொள்வது ரொம்ப முக்கியம்.
பிடித்த ராகம்: கரஹரப்பிரியா
ராகத்தைப் பற்றி: இந்த ராகத்தில் அற்புத மெலடி இசை இருக்கிறது; கருணை ரசம் நிரம்பி வழியும் ராகமும் இதுதான்.
இதில் அமைந்த சிறந்த பாடல்கள்: அய்யய்யோ புடிச்சிருக்கு (சாமி), சந்திக்காத கண்களில் (180), சங்கீத சுவரங்கள் (அழகன்), நாதஸ்வர ஆலாபனை (உன்னால் முடியும் தம்பி), மாதவி பொன் மயிலாள் (இரு மலர்கள்)

Related