
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி திரையுலகினர் சார்பில் அடையாள கண்டனப் போராட்டம் நடந்தது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசியதாவது:
“இந்தப் போராட்டத்தை துறை சார்ந்த அறிஞர்கள், தொடர்புடைய வல்லுநர்களை எல்லாம் அழைத்து வந்து ஒருநாள் முழுக்க மக்களுக்கான தேவை, தீர்வுகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் பேசவேண்டும் என்று திட்டமிட்டோம். ஆனால், அது ஈடேறவில்லை. இந்தக் குறுகிய காலகட்டத்தில், எங்களுக்கு கிடைத்த இந்தச் சிறிய இடத்தில் நடத்தும் இந்தக் கண்டனப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த திரையுலகினருக்கு நன்றி.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் எல்லைகள் வகுத்த பிறகு, நீருக்கான இந்தப் பிரச்சினை பெரிதாக இருந்து வருகிறது. இறைவனுக்கு இணையான விஷயம்தான் தண்ணீர். எதிர்காலத்தில் மூன்றாம் உலகப்போர் வருமென்றால், அது தண்ணீருக்காகத்தான் வரும் என்கிறார்கள், வல்லுநர்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மக்களின் உரிமை. நேர்மையான தேவையும்கூட. அதேபோல ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது உள்ளிட்ட மக்களின் பிரச்சினைகளுக்கும் முக்கியத் தீர்வுகள் காணப்பட வேண்டும். இந்த விஷயத்தில், மக்களின் உரிமைக்குரலுக்கு மத்திய மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும். மக்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரும் என்று கருதுகிறவர்களே பாதிக்கப்பட உள்ளோம் என்பதைப் புரிந்து போராட்டம் செய்யும்போது, அதற்குத் தீர்வுகாண வேண்டும்.
சினிமா சார்ந்த பிரச்சினைகள் நெருக்கடியில் நாங்களும் தவித்துக் கொண்டிருக்கிறோம். அதுவும் கடந்த ஒரு மாதகாலமாக வேலை வாய்ப்பில்லாத ஃபெப்சி தொழிலாளர்கள், மக்களின் உரிமைக்காக இங்கே போராட்டத்துக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒட்டுமொத்தத் திரையுலகமும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.
மேலும், இங்கே தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், ஃபெப்சி அமைப்பு, ஒளிப்பதிவாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் அமைப்பு, சின்னத்திரை நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட ஒட்டுமொத்தத் திரையுலகமும் அழைப்பை ஏற்று வந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரது தனிப்பட்ட குரலும் மக்களின் நன்மைக்கானதே… ஆகவே, இந்தப் போராட்டத்துக்கு மவுனமே சிறந்த ஆயுதமாகக் கருதி, இங்கே கூடியுள்ள ஒட்டுமொத்தத் திரையுலகினரும் தங்களது மவுன அறவழி கண்டனப் போராட்டம் வாயிலாகப் பதிவு செய்வோம்” என்று பேசினார் நாசர்.
