
விவோ புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டிகள் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. 11 மாநிலங்களில் இருந்து 12 அணிகள் இதில் கலந்து கொள்ள உள்ளன. சச்சின் டெண்டுல்கர் இணை உரிமையாளராக உள்ள தமிழ்நாடு அணி ‘தமிழ் தலைவாஸ்’ என்ற பெயரில் களமிறங்குகிறது. ‘தமிழ் தலைவாஸ்’ அணியின் தூதராக நடிகர் கமல்ஹாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே தமிழ் தலைவாஸ் அணியின் ஜெர்சி அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சச்சின், கமல்ஹாசன், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:
”என்னை கபடி விளையாடக் கூடாது என்று தடுத்தது ஒரு பட இயக்குநர். வெளியூரில் படப்பிடிப்பில் இருக்கும் போது ஸ்டண்ட் நண்பர்களோடு நிறைய கபடி விளையாடுவேன். ஒரு முறை ஆர்வமாக விளையாடிக் கொண்டிருக்கும் போது, மூக்கு உடைந்துவிட்டது. ஆகையால் அடுத்த நாள் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டார்கள். அதிலிருந்து என்னை கபடி விளையாடுவதிலிருந்து தடுத்துவிட்டார்கள். இந்த அணிக்கு விளம்பர தூதராக இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
‘தமிழ் தலைவாஸ்’ எனப் பன்மையில் பெயர் வைத்தது சந்தோஷமாக இருக்கிறது. சமீபகாலமாக ஒருமையில் பேசுவது வழக்கமாகி விட்டது. (அரங்கில் பயங்கர கைதட்டல் கேட்டது) ஏதாவது தப்பாக சொல்லிவிட்டேனா… அந்தத் தலைப்பின் மூலம் எல்லோரும் இந்நாட்டின் மன்னரே என கூறியுள்ளார்கள்.
இந்திய மற்றும் தமிழ் கலாச்சாரத்தில் இருக்கும் வீர விளையாட்டுகள் எல்லாமே அமைதிக் காலத்தில் போரை மறந்துவிடாமல் இருப்பதற்காக நினைவுபடுத்தும் விதமாக இருந்தது. அலகு குத்திக் கொள்வது கூட அதற்குத் தான் என நினைக்கிறேன். ஏனென்றால் முதல் ரத்தத்தைப் பார்த்தவுடன் பயந்துவிடக்கூடாது என்பது குணாதிசயமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக எப்போதுமே ஏறுதழுவுதல் உள்ளிட்ட விளையாட்டுகளை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருந்துள்ளார்கள். ஒலிம்பிக் போட்டி வந்ததே அதற்குத் தான் எனச் சொல்வார்கள்.
இந்திய விளையாட்டுகளில் மூத்த அண்ணனாக திகழும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட சச்சின் இதை கையில் எடுத்திருப்பது ஒரு பெருமைக்குரிய விஷயம். அவருடைய பெருந்தன்மை என்பதை விட, இது கபடிக்கு கிடைத்த பெருமையாகவும் நினைக்கிறேன். அது பாராட்டுக்குரியது.
விளையாடுவதற்கு நேரமில்லாமல் சினிமாவுக்கு வந்துவிட்டேன். இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதும் அந்த சந்தோஷத்தில் தான். கபடி, சடுகுடு என்று நாடு முழுவது இருக்கும் இந்த விளையாட்டை நாம் மறந்துவிட்டோம். அதை இப்போது இவர்கள் கையில் எடுத்தது மாதிரி ஒரு சந்தோஷம் இருக்க முடியாது.
இவ்வாறு கமல் பேசினார்.
இவ்விழாவில் அல்லு அர்ஜூன் பேசியதாவது, “கமல் சார் வருகிறார் என்ன தலைப்பு வைத்தால் சரியாக இருக்கும் என்று யோசித்தோம். ‘தமிழ் தலைவாஸ்’ என வைத்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது. அவர் இந்த அணிக்கு விளம்பரத் தூதராக இருப்பது பெருமையாக இருக்கிறது. நான் ஒரு அணியைத் தேர்வு செய்தால் அதற்கு கமல் சார் தான் கேப்டனாக இருப்பார். அடுத்ததாக நேரடி தமிழ் படத்தில் நடிக்கவுள்ளேன்” என்று பேசினார்.
