Thursday, March 12
Shadow

தொரட்டி- சினிமா விமர்சனம் (நேட்டிவிட்டி) Rank 3.5/5

தமிழ்நாட்டின் கிராமங்களில் வாழும் எளிய மக்களின் வாழ்க்கையை விதவிதமாக எத்தனையோ திரைப்படங்கள் பதிவு செய்துள்ளன. அந்த வரிசையில் இன்னொரு படம் ‘தொரட்டி.’

இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் பதிவு செய்யாத, விவசாய நிலங்களில் ‘கிடை’ போட்டு பிழைப்பு நடத்தும் நகர்த்தும் ‘கீதாரி’ மக்களின் வாழ்க்கைச் சூழலை கதைக்களமாக்கியிருப்பது ‘தொரட்டி’யின் தனித்துவம்!

பிழைப்புக்காக ஊர் ஊராகப் போகும் மிகமிக எளிமையான கீதாரி குடும்பம் அது. அந்த குடும்பத்தின் ஒரே வாரிசு பிழைக்கப் போன இடத்தில், குடி போதை சுகத்துக்காக கொலை செய்யக்கூட தயங்காத கீழ்த்தரமான மூன்று பேருடன் சேர்ந்து தானும் குடிக்கு அடிமையாகிறான்.

அவனைத் திருத்துவதற்காக அவனது முறைப் பெண்ணைக் கட்டி வைக்கிறார்கள்.

அவன் திருந்த நினைத்தாலும் காலச்சூழல் அந்த இழிபிறவிகளோடு தொடர்பு ஏற்படுத்துகிறது.

அந்த கூடா நட்பால் அவன் குடும்பம் சந்திக்கும் விளைவுகளே மிச்சசொச்ச கதையோட்டம்.

படத்தில் பலரும் புதுமுகங்கள். நாயகன் ஷமன் மித்ரு எல்லா காட்சியிலும் அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டிருக்கிறார். அதுவே அவர் ஏற்றிருக்கும் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறது.

படத்தின் பெரிய பலம் நாயகி சத்யகலாவின் வெளுத்து வாங்கும் நடிப்பு. கம்பீரம், கனிவு, கோபம், காதல் என அத்தனை உணர்ச்சிகளையும் சின்னச் சின்ன முகபாவங்களிலேயே கொட்டிக் குவித்திருக்கும் சத்யகலா ரொமான்ஸ் காட்சிகளில் வாழ்ந்திருக்கிறார். மேடம் நடிப்புக்கு புதுமுகமாம், நம்ப முடியவில்லை!

படத்தின் மற்ற கதாபாத்திரங்களின் நடிப்புப் பங்களிப்பும் நிறைவு! நாயகனின் அப்பாவாக வருகிற அழகு தனித்துத் தெரிகிறார்.

கதை, திரைக்கதை, கதை நடக்குமிடங்கள் என எல்லாவற்றிலும் உயிரோட்டம்; சினிமாத்தனமில்லாத உயிரோட்டம்! இயக்கம்: பி. மாரிமுத்து

வேத்சங்கர் இசையில் சிநேகனின் கிராமத்து மண்வாசனை தவழும் பாடல்கள், ஜித்தின் கே. ரோஷனின் பின்னணி இசை, ஒளிப்பதிவு… இன்னபிற தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் படத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன!

சிலபல குறைகள் தென்பட்டாலும் புதிய கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அதை எளிய பொருட்செலவில் ‘நேட்டிவிட்டி’யோடு படமாக்கியிருப்பதற்காக ‘தொரட்டி’ படக்குழுவுக்கு தாராளமாய் தரலாம் பாராட்டுப் பூங்கொத்து!

மொத்தத்தில் தொரட்டி  நியூ கிரியேடிவிட்டி வித் நேட்டிவிட்டி… Rank 3.5/5