Sunday, April 19
Shadow

உரு – திரைவிமர்சனம் ( அழகிய உருவம் ) Rank 3/5

இந்த வாரம் நான்கு அறிமுக இயக்குனர்களின் படங்கள் வெளியாகி இருக்கிறது இவை அனைத்தும் நிச்சயம் தமிழ் சினிமாவின் முன்னேற்றம் என்று தான் சொல்லணும் காரணம் எல்லோரும் இதுவரை வராத புதுவித கதையுடன் தான் வலம் வந்துள்ளனர். வித்தியாசமான திரைகதை தொழில்நுட்பம் இதுவே தமிழ் சினிமாவின் பலம் இந்தியாவிலே மிக சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள் என்றால் அது தமிழ் சினிமாவில் தான் உள்ளனர் என்று நிருபித்துள்ளனர்.

இந்த படத்திலும் படத்துக்கு மிக பெரிய பலம் என்றால் திரைகதை ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் என்று சொல்லணும் ஏன் இயக்குனரின் காட்சியமைப்பு பலம் அறிமுக இயக்குனர் என்றாலும் அதை மிக சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குனர் விக்கி ஆனந்த்

இந்த படத்தில் மீண்டும் வெற்றி கூட்டனி ஜோடி கலையரசன் மற்றும் தன்சிகா மைம்கோபி,டேனியல், தமிழ் செல்வி கார்த்திகா ஜெயபாலன் இவர்கள் மட்டும் தான் படத்தில் மிக குறைந்த நட்சத்திரம் வைத்து எடுத்துள்ளார் இயக்குனர் படத்துக்கு இசை ஜோகன் இசையால் மிக அருமையாக மிரட்டியுள்ளார். படத்தின் மிக பெரிய பலம் என்றால் அது ஒளிப்பதிவாளர் பிரசன்னா .S. குமார் இயக்குனரில் பலம் என்று தான் சொல்லணும் காரணம் படம் முழுக்க இரவு நேரத்தில் ஒரு வீட்டில் நடப்பது போல கதை அது தான் சரி வாங்க கதையை பார்க்கலாம்

பிரபல எழுத்தாளர் கலையரசன், தனது மனைவி தன்ஷிகா உடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தொடக்கத்தில் அவர் எழுதிய கதைகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், வர்த்தக ரீதியாகவும் நல்லவிதமாக அமைந்தது. ஆனால் சமீபத்தில் கலையரசன் எழுதிய கதைகள் மக்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லாமல், பழைய பாணியிலேயே இருப்பதால் போதிய வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில், கலையரசனின் கதைகள் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப வித்தியாசமாக இல்லை. காதல், செண்டிமண்ட் என அரைத்த மாவையே அரைக்காமல் புதுமையாக யோசித்து எழுதும்படி சிலர் அவருக்கு அறிவுரை கூறுகின்றனர். தன்ஷிகாவும் கதை எழுதுவதை விட்டுவிட்டு படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை பார்க்கும்படி கலையிடம் கூறிவருகிறாள்.

ஆனால் கதை எழுதுவதில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் கலையரசனுக்கு, ஒரு கட்டத்தில் த்ரில்லர் கதை எழுதுவதற்கான துணுக்கு ஒன்று கிடைக்கிறது. எப்போதுமே டிரெண்ட் மாறாத ஒரே எமோஷன் “பயம்” என்பதால் ஒரு வித்தியாசமான கதையை எழுத முடிவு செய்து மேகமலைக்கு செல்கிறார். மேகமலை காட்டில் அமைதியான இடத்தில் இருக்கும் ஒரு தனி வீட்டிற்கு சென்று கதை எழுத ஆரம்பிக்கிறார்.

அங்கு சில மர்மமான சம்பவங்கள் அவருக்கு நிகழ ஆரம்பிக்கின்றன. அதுவும், கலையரசன் என்ன எழுதுகிறாரோ, அது உண்மையாகவே நடக்க ஆரம்பிக்கிறது. தொடக்கத்தில் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் இருக்கும் கலையரசனுக்கு, தான் எழுதும் கதை அப்படியே நடப்பது குறித்து வியப்பும், பயமும் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவரது கதையில் வரும் சீரியல் கில்லர், கலையரசனையே கொல்ல வருகிறான்.

அந்த சீரியல் கில்லர் யார்? கலையரசன் எழுதும் கதை அப்படியே நடப்பதற்கான காரணம் என்ன? அந்த கில்லர் ஏன் கலையரசனை கொல்ல வருகிறான்? அதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கலையரசன், இப்படத்திலும் அதனை பின்பற்றி இருக்கிறார். இப்படத்தில் ஒரு எழுத்தாளருக்கு தேவையான குணநலன்களுடன் வலம் வரும் கலையரசனின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக மேகமலையில் நடக்கும் சம்பவங்களில் அவர் அனுபவிக்கும் அமானுஷ்ய விஷயங்களால் பயம், ஆச்சரியம், வியப்பு என மாறி மாறி நடித்து ரசிக்க வைக்கிறார்.

தனது முதல் படத்திலேயே பேசப்படும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த தன்ஷிகா, தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்திலும் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. தன்ஷிகாவின் கதாபாத்திரம் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளிலும் ரசிக்க வைத்திருக்கிறார்.

மைம் கோபிக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் அமையாவிட்டாலும், தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார். ஜெயபாலன் அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்.

மொத்தத்தில் உரு அழகிய உருவம் Rank 3/5

Leave a Reply