
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 62’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சன் நெட்வொர்க் அலுவலகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய் கருப்பு நிற கோர்ட் ஷூட் போட்டு கண்ணாடி அணிந்து மிகவும் ஸ்டைலாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தது.
இதையடுத்து நேற்று சென்னை தியாகராய நகர், வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தில் விஜய் மல்டி மில்லியனராக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
மேலும் யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில், இவர்கள் கூட்டணியில் பிரபல அரசியல்வாதி பழ கருப்பையாவும் இணைந்திருக்கிறார். இவர் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார். மேலும் மற்றொரு வில்லனாக ராதாரவியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மூன்று வில்லன் யார் என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.