
விஜய் ரசிகர் மன்றப் பொறுப்பாளர் ஆனந்தின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கடந்த 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க விஜய் வருவதை அறிந்து, அங்கு ஏராளமான ரசிகர்கள், அமைப்பு நிர்வாகிகள் திரண்டிருந்தனர்.
திருமண அரங்குக்குள் விஜய், தன் மனைவி சங்கீதாவுடன் வந்ததும், அவரைக் காண ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்ததால், அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், மண்டபத்தில் இருந்த ஏராளமான நாற்காலிகள் சேதமடைந்தன.
இந்த சம்பவத்தால் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவால் மணமக்களின் அருகில் சென்று வாழ்த்துகூடத் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், பெரும் முயற்சி செய்து மேடைக்குச் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், மேடையிலும் ரசிகர்கள் ஏறி அவருடன் புகைப்படம் எடுக்க முயற்சித்ததால், சில நிமிடங்களிலேயே விஜய் அங்கிருந்து புறப்பட்டார்.
காரில் சென்று ஏறமுடியாத அளவுக்கு மண்டபத்திற்கு வெளியேயும் கூட்டம் திரண்டது. இதையடுத்து, அங்கிருந்த சில ரசிகர்கள் விஜய்யைப் பெரும்பாடுபட்டு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால், அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார் விஜய். இனிமேல் ரசிகர்களின் இல்லங்களில் நடைபெறும் திருமண விழாவிற்கு, நேரில் சென்று வாழ்த்து தெரிவிக்காமல், அவர்களை வீட்டிற்கு அழைத்து வாழ்த்து தெரிவிப்பது என்ற முடிவை எடுத்துள்ளார்.
இதனால், திருமண வீட்டாருக்குத் தர்மசங்கடம் ஏற்படுவதைத் தவிர்ப்பதோடு, கூட்ட நெரிசல் போன்ற காரணங்களால் ரசிகர்களின் மனமும் வருத்தப்படக் கூடாது என்பதால் விஜய் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
