
நடிகர் அஜித், இயக்குனர் சிவாவுடன் இணைவதாக அறிவிப்பு வெளியானது முதலே தல ரசிகர்கள் எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தனர். இந்த அறிவிப்பு வெளியான பின்னர், நடிகர் அஜீத்துக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை நயன்தாரா நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். ஏற்கெனவே ’பில்லா’ மற்றும் ’ஆரம்பம்’ படங்களில் அஜித் நயன்தாரா இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். ரூபன் எடிட் செய்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விவேக், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்போது படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போது, இந்த படத்தை தயாரிப்பவர்கள், தல அஜீத்தின் விஸ்வாசம் படத்தின் 1st லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு இணைய தளத்தில் தீ போன்று பரவி வருகிறது.
அஜித் சாயிபாபா பக்தர் என்பதால், வியாழக்கிழமையான இன்று விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தப் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வியாழக்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட, அஜித் ரசிகர்கள் உற்சாகமானார்கள். இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே ட்விட்டரில் இந்திய அளவில் விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் ஆக்கிவிட்டார்கள்.
விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நரைத்த முடியுடன் ஒரு அஜித், கருகரு முடியுடன் இன்னொரு அஜித் என்று இருப்பதால், இரட்டைவேடமாக இருக்கலாம் என்று திரையுலகில் பேச்சு அடிபடுகிறது.
இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள படக்குழுவினர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், அஜித் நடிப்பில் உருவாக்கி வரும் விஸ்வாசம் படத்தின் 1st லுக்கை வெளியிட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இந்த படம் வரும் 2019ம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று வெளியாகும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
அஜித்தும் இயக்குநர் சிவாவும் இணைந்த படத்தின் முதல் எழுத்து, வி வரிசையில் அமைவது வழக்கமாகிவிட்டது. வீரம், வேதாளம், விவேகம், இப்போது விஸ்வாசம் என இவர்களின் கூட்டணியில் எல்லாமே ‘வி’ வரிசையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
