
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் வரும் 7ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்த நடிகர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
நிதீஷ் வீரா என்பவர்தான் ரஜினியின் மகனாக ‘காலா’வில் நடித்துள்ளார். கூத்துப்பட்டறையின் பயிற்சியாளராகிய இவர் செல்வராகவன் இயக்கிய பல படங்களிலும், சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘மாவீரன் கிட்டு’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
‘காலா’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து நிதீஷ் வீரா கூறுகையில், ‘ரஜினி அவர்களுடன் நான் 40 நாட்கள் நடித்தேன். இந்த நாட்கள் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத அபூர்வமான நாட்கள் ஆகும். ‘கபாலி’க்கு பின்னர் ‘காலா’ படத்தை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் எனக்கு ஒரு முக்கிய கேரக்டரை தருவதாக கூறியிருந்தார். ஆனால் படப்பிடிப்பின் முதல் நாள் வரை எனக்கு என்ன கேரக்டர் என்பதை ரஞ்சித் கூறவில்லை. அதன் பின்னர் நான் தான் ரஜினி அவர்களின் மூத்த மகனாக நடிக்கவிருப்பதாக அவர் கூறியவுடன் எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
ரஜினி-ஈஸ்வரிராவ் ஜோடியின் மூத்த மகன் கதிரவன் என்ற கேரக்டரில் இந்த படத்தில் நான் நடித்துள்ளேன். மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் ரஜினியை போல் ஒரு எளிமையானவரை நான் பார்த்ததில்லை. செட்டுக்கு வந்ததும் என் தோள் மீது கைவைத்து ஹாய் சொல்லுவார். அவருடன் நடிக்கும் ஒவ்வொரு நாளும் நான் ஒரு புது விஷயத்தை கற்றுக்கொண்டேன். அதேபோல் இந்த படத்தின் நானாபடேகரின் நடிப்பும் ரஜினியின் நடிப்புக்கு இணையாக இருந்தது.
கடைசி நாள் படப்பிடிப்பில் காலை 7 மணிக்கு வந்த சூப்பர் ஸ்டார் மறுநாள் காலை 6 மணி வரை பொறுமையுடன் இருந்து நடித்து கொடுத்தது அவர் தன்னுடைய தொழிலில் எந்த அளவுக்கு பயபக்தியுடன் உள்ளார் என்பது எங்கள் அனைவருக்கும் புரிந்தது என்று நிதீஷ் வீரா கூறியுள்ளார்
