Sunday, April 21
Shadow

ஆஸ்கர் விருதுக்கான இறுதி பட்டியலில்’விசாரணை’இல்லை

ஆஸ்திரேலியாவின் ‘டன்னா’, கனடாவின் ‘இட்ஸ் ஒன்லி தி எண்ட் ஆஃப் தி வேர்ல்டு’, டென்மார்க்கின் ‘லேண்ட் ஆஃப் மைன்’, ஜெர்மனியின் ‘டோனி எர்ட்மன்’, இரானின் ‘த சேல்ஸ்மேன்’, நார்வேயின் ‘த கிங்ஸ் சாய்ஸ்’, ரஷ்யாவின் ‘பாரடைஸ்’, ஸ்வீடனின் ‘எ மேன் கால்டு ஓவி’ மற்றும் சுவிட்ஸர்லாந்தின் ‘மை லைஃப் அஸ் ஏ ஸுச்சினி’ ஆகிய 9 படங்கள் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான விருது பிரிவின் தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இவற்றில் இருந்து இறுதிகட்ட போட்டியில் இடம்பெறும் 5 படங்களின் பரிந்துரைப் பட்டியலை இனி ஆஸ்கர் குழு தேர்ந்தெடுக்கும்.

ஆஸ்கர் விருதுக்கான இறுதிக்கு முந்தைய தெரிவுப் பட்டியலில் ‘விசாரணை’ இடம்பெறாத நிலையில், அந்த 9 படங்களின் பட்டியலை மட்டும் இயக்குநர் வெற்றிமாறன் தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் ரிப்ளை செய்து வருகின்றனர். அதில், ‘விசாரணை’ இவ்வளவு தூரம் பயணித்ததே மிகப் பெரிய வெற்றியும் கவுரமும்தான் என்று பலரும் நெகிழ்ச்சிக் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் ‘விசாரணை’. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த இப்படத்தை லைக்கா நிறுவனம் வெளியிட்டது.

பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம் 3 தேசிய விருதுகளையும் கைப்பற்றியுள்ளது. சிறந்த தமிழ் படம், சிறந்த எடிட்டிங் மற்றும் சிறந்த உறுதுணை நடிகர் என 3 தேசிய விருதுகளை இப்படம் கைப்பற்றியது.

இந்தியத் திரைப்பட கூட்டமைப்பு, இந்த ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பிரிவு போட்டிக்கு, இந்தியாவில் இருந்து ‘விசாரணை’ தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பியது. இந்திய மொழிகளில் வெளியான 29 படங்கள் அடங்கிய தெரிவுப் பட்டியலில் இருந்து ‘விசாரணை’ படம் இறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாக தமிழ் படங்களில் இருந்து ‘ஹேராம்’ திரைப்படம், ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 16 வருடங்கள் கழித்து ஒரு தமிழ் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘விசாரணை’ கடந்து வந்த பாதை!

‘லாக்கப்’ என்ற நாவலை மையமாக வைத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விசாரணை’. இப்படத்தின் பணிகளை முடித்து பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினார்கள். முதலில் வெனிஸ் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. அவ்விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் ‘விசாரணை’. இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர் அனுராக் கஷ்யாப் இப்படத்தைப் பார்த்து வியந்துவிட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம் தணிக்கை அதிகாரிகளால் ‘யு/ஏ’ சான்றிதழுடன் பிப்ரவரி 5ம் தேதி வெளியானது. ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் இப்படத்தைப் பாராட்டினார்கள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

Leave a Reply