Saturday, August 22
Shadow

காப்புரிமை இல்லாமல் உலக முருக பக்தர்களுக்காக உருவான ‘முருகர் யுகம் பிறந்தாச்சி’ – ஜெயம் எஸ்.கே. கோபியின் ஆன்மிகப் பயணத்தில் புதிய மைல்கல்

காப்புரிமை இல்லாமல் உலக முருக பக்தர்களுக்காக உருவான ‘முருகர் யுகம் பிறந்தாச்சி’ – ஜெயம் எஸ்.கே. கோபியின் ஆன்மிகப் பயணத்தில் புதிய மைல்கல்

சென்னை: முருக பக்தர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘முருகர் யுகம் பிறந்தாச்சி’ என்ற புதிய பக்திப் பாடல், காப்புரிமை கட்டுப்பாடுகள் இல்லாமல் உலகம் முழுவதும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பக்திப் பாடல் உலகில் வித்தியாசமான முயற்சியாக உருவாகியுள்ள இந்தப் பாடலை புண்ணியம் பவுண்டேஷன் தயாரித்துள்ளது. பிரபல இசை நிறுவனமான திவோ மியூசிக் (Divo Music) வெளியிடுகிறது.

பிரபல தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் நடிகரான ஜெயம் எஸ்.கே. கோபி, கடந்த இரண்டு ஆண்டுகளாக முருக வழிபாடு மற்றும் முருகனைச் சார்ந்த பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தார். அந்த ஆன்மிகப் பயணத்தின் தொடர்ச்சியாக, உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களை இணைக்கும் வகையில் ‘முருகர் யுகம் பிறந்தாச்சி’ பாடலை உருவாக்கியுள்ளார்.

முருக பக்திக்கும் முருகனுக்கும் இடையே நடைபெறும் உரையாடலைப் போன்ற உணர்வில் பாடல் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இமயம் முதல் குமரி வரை முருக வழிபாடு பரவியிருப்பதை எடுத்துரைக்கும் வகையில் பாடலின் வரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தப் பாடலுக்கு தனது தெய்வீகக் குரலால் உயிர் கொடுத்துள்ளார் பாடகி வைக்கம் விஜயலட்சுமி. தமிழ்த் திரையுலகில் பல்வேறு வெற்றிப் பாடல்களை வழங்கியுள்ள வைக்கம் விஜயலட்சுமி பாடும் முதல் பக்திப் பாடல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரபல திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடனின் மகன் தயானந்த் பிறைசூடன் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார். ‘பிறைசூடன்’ என்பது சிவனை குறிக்கும் பெயர் என்பதால், சிவனின் மகனான முருகனைப் பற்றிய பாடலுக்கு அவரது மகன் இசையமைத்திருப்பது ஆன்மிக ரீதியாகவும் பொருத்தமான நிகழ்வாக அமைந்துள்ளதாக தயாரிப்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

திரைப்படத் துறையில் பணியாற்றிய பல முன்னணி இசைக்கலைஞர்களும் இந்தப் பாடலின் உருவாக்கத்தில் பங்கேற்றுள்ளனர்.

பாடல் உருவான விதம் குறித்து ஜெயம் எஸ்.கே. கோபி கூறுகையில், “இந்தப் பாடலை நான் உருவாக்கினேன் என்று சொல்வதைவிட, முருகன் எனக்குள் இட்ட ஆணையின் மூலம் இந்தப் பாடல் உருவானது என்றுதான் கூற வேண்டும். என்னை வழிநடத்தியது முருகன்தான். உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களுக்காக இந்தப் பாடல் உருவாகியுள்ளது. ஒரு முருக பக்தருக்கும் முருகனுக்கும் இடையே நடைபெறும் உரையாடலைப் போல பாடல் அமைந்துள்ளது. இந்தப் பாடலை உலகெங்கும் உள்ள முருக பக்தர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்றார்.

இந்த முயற்சியின் முக்கியமான அம்சமாக, பாடலை உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் காப்புரிமை கட்டுப்பாடுகள் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனிப்பட்ட பக்தி நிகழ்வுகள், கோவில் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்வுகளில் இந்தப் பாடலை பக்தர்கள் சுதந்திரமாக பயன்படுத்தும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

முருக பக்தர்களுக்கான இந்தப் புதிய இசைப் படைப்பு ஆகஸ்ட் 25ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியாகிறது.