Thursday, April 23
Shadow

நடிகை ஸ்ரீபிரியா பிறந்த தினம் இன்று இவரை பற்றிய சில வரிகள்

இவர் தற்போது கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமைப் பேச்சாளராகப் பொறுப்பு வகிக்கின்றார். இவர் 1970கள் மற்றும் 1980 களில் முன்னணி வேடங்களில் நடித்த நடிகை ஆவார்.

இவர் தெலுங்கு, கன்னட, மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளபோதிலும், இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இராஜ்குமார் என்னும் நடிகரை மணந்தார். இவர்களுக்கு சினேகா, நாகார்ஜூன் என்னும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் தற்போது துணைவேடங்களிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இரு திரைப்படங்களையும் இரு தொலைக்காட்சி தொடர்களையும் இவர் இயக்கியுள்ளார்.

தமிழில் சிறீ பிரியாவை 1974ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் அவள் ஒரு தொடர்கதை என்னும் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். அநேகமாகப் புதுமுகங்களே நடித்து மாபெரும் வெற்றி பெற்ற அப்படத்தில் நாயகியின் இளவயது விதவைத் தங்கையாக குணச்சித்திரப் பாத்திரத்தை ஏற்று நடித்து சிறீ பிரியா தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார். அப்போது முன்னேறி வரும் நடிகராக இருந்த கமல்ஹாசன் அவரிடம் ஒருதலைக் காதல் கொள்பவராக நடித்திருந்தார்.

ஸ்ரீபிரியா தமிழில் முதன்மையான அனைத்து இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் படங்களிலும் நடித்தார். ரஜினி காந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவருடனும் மிக அதிகமான படங்களில் இணைந்து சிறீ பிரியா நடித்துள்ளார்.

இவரது திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனையாகத் திகழ்வது அவள் அப்படித்தான் என்னும் திரைப்படம். இதில் தாம் சந்தித்த தொடர் தோல்விகளின் காரணமாக, சமூகத்தின் மீதும் வாழ்க்கையின் மீதும் நம்பிக்கை அற்றுப்போன பெண்ணின் கதாபாத்திரத்தினை மிக இயல்பாக சித்தரித்திருந்தார். வணிக அடிப்படையில் வெற்றி பெறாவிடினும், இப்படம் இன்றளவும் தமிழின் தலை சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தமிழக நடிகைகளில் 350 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தவர் ஸ்ரீபிரியா. எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெய்சங்கர், கமல், ரஜினி என எல்லா முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தவர்.

தமிழ்ப் படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று 350 படங்களை தாண்டியிருக்கிறார். தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 150 படங்கள். சிவாஜியுடன் 20 படங்கள், ஜெய்சங்கருடன் 20 படங்கள், கமலுடன் 32 படங்கள், ரஜினியுடன் 30 படங்கள் என்று முன்னணி நட்சத்திரங்களின் `தொடர் நாயகியாக’ உலா வந்த பெருமை இவருக்கு உண்டு.

ஜெமினி, ஏவி.எம். போன்ற பெரிய சினிமா நிறுவனங்களில் ஆஸ்தான நடனக்கலைஞர் என்ற அந்தஸ்துடன் இருந்த பிரபல நடனமேதை கே.என். தண்டாயுதபாணி பிள்ளை, ஸ்ரீபிரியாவின் பெரியப்பா. இவர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். நடன அமைப்பாளர்கள் சங்கத்தில் இப்போதும் கே.என்.தண்டாயுதபாணி பிள்ளையின் படம் இருக்கிறது.

பெரியப்பாவின் நடனப்பின்னணியில் ஸ்ரீபிரியாவின் அப்பா பக்கிரிசாமியும் நடனக் கலைஞர். அம்மா கிரிஜாவும் நடனத்தில் தேர்ந்தவர்.

ஜெமினி தயாரித்த “மூன்று பிள்ளைகள்” படத்தில் பக்கிரிசாமி நடன இயக்குனராக இருந்து, கிரிஜாவை நடனமாடச் செய்திருக்கிறார்.

`ஸ்ரீபிரியா’ என்பது சினிமாவுக்காக டைரக்டர் பி.மாதவன் சூட்டிய பெயர். நிஜப்பெயர் அலமேலு.

டைரக்டர் பி.மாதவன் இயக்கிய “முருகன் காட்டிய வழி” என்ற படம் மூலம்தான் ஸ்ரீபிரியா சினிமாவில் அறிமுகமானார். ஆனால், டைரக்டர் ஏ.பி.நாகராஜன் இயக்கி சிவாஜி -சாவித்திரி சிவன்- பார்வதியாக நடித்த “திருவிளையாடல்” படத்திலேயே நடித்திருக்க வேண்டியவர்.

இவர் நடித்ததில் முக்கியமான படங்கள்

அவள் ஒரு தொடர்கதை, அவள் அப்படித்தான், ஆட்டுக்கார அலமேலு, தாய் மீது சத்தியம், நட்சத்திரம், நீயா, பைரவி, வாழ்வே மாயம்