
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கால் பந்தாட்டம் தொடர்பான கதை என்னுடையது என்றும், 256 பக்கங்கள் கொண்ட கதையை பதிவு செய்துள்ளதாக குறும்பட இயக்குநர் செல்வா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சர்கார், விஜயின் இந்தப் படம் ரிலீசுக்குப் பின்பு ஏற்படுத்திய சலசலப்புக்கு இணையாக ரிலீசுக்கு முன்பும் ஏற்படுத்தியது, ‘கதைத்திருட்டு’ என்ற குற்றச்சாட்டில் சிக்கி. சர்கார் தனது கதை என்றும் ‘செங்கோல்’ என்ற பெயரில் தான் ஒரு திரைக்கதையை உருவாக்கியதாகவும் அதுதான் இப்போது சர்கார் படமாகியிருப்பதாகவும் வருண் ராஜேந்தரின் என்பவர் குற்றம் சாட்டி, அது நீதிமன்றம் வரை சென்று இறுதியில், சர்கார் படத்தின் டைட்டிலில் அவருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார் முருகதாஸ். பணமும் கொடுக்கப்பட்டது. அதற்கு முன்பு விஜய் – முருகதாஸ் இணைந்த கத்தி படத்திலும் இந்தப் பிரச்சனை எழுந்தது. இப்போது விஜய் – அட்லீ இணையும் தளபதி 63 (இன்னும் பெயரிடப்படவில்லை) படத்தின் கதை தன்னுடையது என்று திரைத்துறையை சேர்ந்த ஒருவர் குற்றம் சாட்டி வழக்கும் தொடுத்திருக்கிறார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
