
விஜய் ப்ளஸ் ஏ.ஆர். முருகதாஸ் காம்பினேஷன் எப்போதுமே வாகை சூடி வருகிறது. விஜய்யின் உலகளாவிய மார்க்கெட் 60 அல்லது 70 கோடிகளில் நின்றுகொண்டிருந்தபோது, 100 கோடிக்கு மேல் உலகளவில் வியாபாரமாகி தூக்கி நிறுத்திய திரைப்படம், ‘துப்பாக்கி’. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து, முருகதாஸ் இயக்கிய ‘துப்பாக்கி’ படத்தின் வாயிலாக விஜய்யின் மார்க்கெட் பெரிதாக உயர்ந்தது. அதன்பிறகு, ‘கத்தி’ படத்தில் விஜய், முருகதாஸ் கூட்டணி ஒன்று சேர்ந்தது. அதற்கு முன்பு, விஜய் இரட்டை வேடத்தில் நடித்த ‘அழகிய தமிழ் மகன்’ திரைப்படம் பெரிதாக ஜெயிக்கவில்லை. ‘கத்தி’ படத்தில் விஜய்க்கு டபுள்ஆக்ட் கொடுத்து ஜெயிக்கவைத்தார், ஏ.ஆர்.முருகதாஸ். இப்போது, மூன்றாவது முறையாக விஜய் – முருகதாஸ் கூட்டணியை ஒன்றுசேர்த்திருக்கிறது, சன்பிக்சர்ஸ் நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்கிறது.
இதுவரை விஜய் வாங்கி இருக்காத பெருந்தொகையை விஜய்க்கு சம்பளமாகக் கொடுக்க ஒப்புக்கொண்டிருக்கிறதாம், தயாரிப்பு நிறுவனம். விஜய்க்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது என்று ஒரு பக்கம் பெரிய பட்டிமன்றமே நடந்துகொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் இந்தியில் புகழ்பெற்று விளங்கும் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை கதாநாயகியாக நடிக்கவைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார், ஏ.ஆர்.முருகதாஸ். ஏற்கெனவே, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘லிங்கா’ படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் இயக்கிய ‘அகிலா’ ‘ஹாலிடே’ இந்த இரண்டு படங்களிலும் சோனாக்ஷி சின்ஹா நாயகியாக நடித்தார். ‘துப்பாக்கி’ படத்தின் இந்தி வெர்ஷன் தான் இந்த ஹாலிடே. ஏற்கெனவே இயக்குநர் முருகதாஸுக்கு சோனாக்ஷி நல்ல நட்பு இருக்கிறது. விஜய்க்கு ஹீரோயினாக சோனாக்ஷி பொருத்தமாக இருப்பார் என்று முருகதாஸ் சொல்ல, விஜய்யும் தயாரிப்பாளரும் கோரஸாக டபுள் ஓ.கே சொல்லிவிட்டார்களாம்.