ஹாலிவுட் படம் அப்பகலிப்டோ பாணியில், சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் காதலையும் சேர்த்து சொல்லியிருக்கும் படம் தான் இந்த ‘ஆறாம் வேற்றுமை’.
பள்ளி, மருத்துவமனை, போக்குவரத்து உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத மலைக்காடு என்ற மலைகிராமத்தில் வசிக்கும் மக்கள், தங்கள் பிள்ளைகளை மலைக்கு கீழே உள்ள மற்றொரு மலை கிராமத்தில் தங்கி படிக்க வைப்பதோடு, தங்களது தேவைக்கான பொருட்களையும் மாதத்திற்கு ஒரு முறை அக்கிராமத்திற்கு சென்றே வாங்கி வருகிறார்கள்.
பாதையே இல்லாத அந்த கிராமத்திற்கு அருகே கூனிக்காடு என்ற மலைக்கிராமம் இருக்கிறது. மக்கள் நடமாட்டம் இல்லாத அந்த ஊருக்கு செல்வோர் யாரும் உயிரோடு திரும்பி வந்ததில்லை, அந்த அளவுக்கு ஆபத்தான பகுதியாக இருக்கும் கூனிக்காடு பல மர்மங்களை கொண்டதாகவும் இருக்க, மலைக்காடு கிராமத்தில் உள்ள இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொடூரமாக மரணம் அடைய, அவரைத் தொடர்ந்து அதே கிராமத்தை சேர்ந்த இரண்டு ஆண்களும், அவர்களின் மரணத்தை விசாரிக்க வந்த இரண்டு வனத்துறை அதிகாரிகளும் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். இப்படி உயிரிழப்பவர்கள் ஏதோ பேய் அடித்து இறப்பதாகவும், கொடிய மிருகம் தாக்கி இறப்பதாகவும் ஊர் மக்கள் கூறிவர, அங்குள்ள மர்மத்தை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரி ஒருவர் அந்த மலைக்காடு கிராமத்திற்கு வருகிறார். அப்படி வரும் அவர் மலைக்காட்டின் மர்மத்தை கண்டுபிடித்தாரா இல்லையா?, அந்த கொலைகளுக்கான காரணம் என்ன? என்பது தான் ‘ஆறாம் வேற்றுமை’ படத்தின் மீதிக்கதை.
அப்பகலிப்டோ அளவுக்கு மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டம் படத்தில் இல்லை என்றாலும், இருப்பதை வைத்து தங்களால் இயன்ற வரை படம் பார்ப்பவர்களை பிரமிக்க வைத்திருக்கிறது இந்த ‘ஆறாம் வேற்றுமை’.
படத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருப்பது கிராபிக்ஸும், மினி நேச்சர் தொழில்நுட்பமும் தான். சாதாரண லொக்கேஷன்களையெல்லாம் கிராபிக்ஸில் பயங்கரமான வனப்பகுதியாக காட்டி அசத்தியிருக்கிறார்கள்.
ஹீரோ அஜய், ஹீரோயின் கோபிகா மற்றும் யோகி பாபு, அழகு, சேரன்ராஜ், சூரியகாந்த், பரதேசி பாஸ்கர் என நடிகர்கள் அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
அதிவாசிகளின் கதைக்கு சற்று வித்தியாசமான திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் ஹரிகிருஷ்ணா, காதலுக்கும், நட்புக்கும் ஜாதி மதம் மட்டுமல்ல மொழியும் முக்கியமல்ல என்பதை அழகாக சொல்லியிருக்கிறார். கணேஷ் ராகவேந்திராவின் இசையும், அறிவழகனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
காதல் தான் கரு என்றாலும், அதை வைத்து மலைவாழ் மக்களின் வாழ்க்கையையும், ஆதிவாசிகளின் வாழ்க்கையையும் விவரித்திருக்கும் இயக்குநர், அதை சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் நேர்த்தியாக சொல்லியிருக்கிறார். இருந்தாலும், மலைக்காட்டில் நடைபெறும் கொலை சம்பவங்களை இன்னும் பரபரப்பாக காட்டியிருந்தால் படம் ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைத்திருக்கும்.
கொலை எதற்காக நடக்கிறது என்ற எதிர்ப்பார்ப்பு படம் முழுவதும் இருந்தாலும், அந்த கொலை காட்சிகள் படமாக்கிய விதம் ரொம்பவே சாதாரணமாக இருப்பதால் காட்சிகள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. அதேபோல், ஹீரோ, ஹீரோயின் தவிர்த்து படத்தில் வரும் சில முக்கியமான கதாபாத்திரங்களுக்கான காட்சிகள் குறைவாக இருப்பதும், அந்த காட்சிகளில் நடிகர்களும் நடிப்பில் சொதப்பியிருப்பதும் படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்திருக்கிறது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட வேண்டிய ஒரு படத்தை, தனக்கு கிடைத்த வசதிகளை வைத்து நேர்த்தியான முறையில் சொல்லப்பட்டிருக்கும் இப்படத்தில் உள்ள சில சிறிய குறைபாடுகளை மட்டும் தவிர்த்துவிட்டு பார்த்தால், இந்த ‘ஆறாம் வேற்றுமை’ பார்க்கலாம்