
1965ம் ஆண்டு ‘சாந்தி நிலையம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் மஞ்சுளா. பின்னர் ‘ரிக்ஷாக்காரன்’ படத்தில் கதாநாயகியாக எம்.ஜி.ஆருடன் நடித்தார். தொடர்ந்து அவருடன் ‘உலகம் சுற்றும் வாலிபன்‘, ‘நேற்று இன்று நாளை‘, சிவாஜியுடன் ‘டாக்டர் சிவா‘ உட்பட தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள, கன்னட மொழிகளில் நானூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார். என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், முத்துராமன், கமல், ரஜினி உள்ளிட்ட ஹீரோக்களுடன் நடித்த மஞ்சுளா, ‘உன்னிடம் மயங்குகிறேன்’ என்ற படத்தில் விஜயகுமாருடன் நடித்தபோது அவருடன் காதல் மலர்ந்தது. இருவருக்கும் எம்.ஜி.ஆர் திருமணம் நடத்தி வைத்தார். கடைசியாக 2011,ல் வெளியான ‘என் உள்ளம் தேடுதே’ படத்தில் மஞ்சுளா நடித்திருந்தார்.
தொடர்ந்து எம்ஜிஆருடன் இதய வீணை, நேற்று இன்று நாளை, நினைத்ததை முடிப்பவன் போன்ற படங்களில் நடித்தார் மஞ்சுளா. வசூலிலும் தரத்திலும் நிகரற்ற படமாகக் கருதப்படும் எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் மூவரில் ஒரு நாயகியாக நடித்தார். நிலவு ஒரு பெண்ணாகி என்ற பாடல் இவரைப் பார்த்துப் பாடுவதாக அமைக்கப்பட்டிருக்கும்.
எம்ஜிஆரின் கதாநாயகி என அறியப்பட்டாலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடனும் அதிகப் படங்களில் நடித்தவர் மஞ்சுளா. மன்னவன் வந்தானடி, அன்பே ஆருயிரே, உத்தமன், டாக்டர் சிவா, எங்கள் தங்க ராஜா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
எம்ஜிஆர், சிவாஜி தவிர முத்துராமன், விஜயகுமார் உள்பட பல நடிகர்களுடனும் ஜோடியாக நடித்தார் மஞ்சுளா. ரஜினியுடன் சங்கர் சலீம் சைமன் படத்தில் முதல் முதலில் நடித்தார். அடுத்து குப்பத்து ராஜாவிலும் நடித்தார். ஆனால் அதில் விஜயகுமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
தமிழுக்கு இணையாக தெலுங்குப் படங்களிலும் நடித்தார் மஞ்சுளா. கிருஷ்ணா, நாகேஸ்வரரராவ், ராமாராவ், சோபன் பாபு ஆகியோருடனும் நடித்துள்ளார். எழுபதுகளில் தொடர்ந்து அதிக தெலுங்குப் படங்களில் நடித்தவர் மஞ்சுளா. அந்தக் கால கட்டத்தில் தமிழை விட அதிகமாக தெலுங்கில்தான் அவர் நடித்துள்ளார்.
எண்பதுகளில் அவர் நடிப்பிலிருந்து ஒதுங்கினார். ஆனாலும் ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் குணச்சித்திர, காமெடி பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். சேரன் பாண்டியன், நாம் இருவர் நமக்கு இருவர் உள்பட பல தெலுங்குப் படங்களிலும் நடித்தார்.
விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளா. ஆனாலும் விஜயகுமாரின் முதல் மனைவி குடும்பத்துடன் இணக்கத்துடன் வாழ்ந்து வந்தார். விஜயகுமார், மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். முதல் மனைவி முத்துக்கண்ணுவுக்கு மகள்கள் கவிதா, அனிதா, மகன் நடிகர் அருண் விஜய் ஆகியோர் உள்ளனர்.
