

ஷீலா, திரைப்பட நடிகை ஆவார். இவரது இயற்பெயர் கிலாரா ஆப்ரகாம். இவர் மலையாள, தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரேம் நசீரும் இவரும் இணைந்து அதிகப் படங்களில் நடித்துள்ளனர். 1980-ல் ஸ்போடனம் என்ற திரைப்படத்துடன் தற்காலிகமாக நடிப்பைக் கைவிட்டார். பின்னர் 2003-ல் சத்யன் அந்திக்காடு இயக்கிய மனசினக்கரெ என்ற திரைப்படத்தில் மீண்டும் நடித்தார்.

திரைப்பட இயக்குனரான பாபு சேவியர், இவரது கணவர். இவர் மகன் விஷ்ணுவும் திரைத்துறையில் பணியாற்றுகிறார்.
இவர் கேரளத்தின் திருச்சூரில் பிறந்தவர். திருச்சூர் கணிமங்கலம் சுதேசி ஆன்டணி, கிரேசி ஆகியோர் இவரது பெற்றோர். இவர் ஷீலா என்ற பெயரில் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.
எம்.ஜி.ஆர். நாயகனாய் நடித்த பாசம் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்குள் நிறைந்தார். இவர் செம்மீன், அஸ்வமேதம், கள்ளிச்செல்லம்மா, அடிமைகள், ஒருபெண்ணின்றெ கத, நிழலாட்டம், அனுபவங்ஙள் பாளிச்சகள், யட்சகானம், ஈற்ற, ஸரபஞ்சரம், கலிக, அக்னிபுத்ரி, பார்யமார் ஸூக்ஷிக்குக, மிண்டாப்பெண்ணு, வாழ்வேமாயம், பஞ்சவன் காட், காபாலிக உட்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிரேம் நசீர், சத்யன், மது, ஜெயன், சுகுமாரன் (நடிகர்), கமலகாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
பிரேம் நசீருடன் இணைந்து 110 படங்களில் ஜோடியாக நடித்து உலக சாதனை படைத்தவர். இந்த சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை.
மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கில் 500 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் ஷீலா.
இவர் நடித்த செம்மீன் படம் மிகவும் புகழ் பெற்றது. இந்தப் படத்திற்குப் பிறகு இவர் செம்மீன் ஷீலா என்று அழைக்கப்படலானார்.

தமிழில் இவர் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சந்திரமுகி படத்தில் நடித்திருந்தார்.
மலையாள ரசிகர்களை ஒரு காலத்தில் தனது கவர்ச்சியாலும், நடிப்பாலும் கவர்ந்த ஷீலாவுக்கு தற்போது வயது 70 ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.