
இயக்குனரும், நடிகருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. விஜய் டி.வி.யிலிருந்து வந்த இன்பசேகர் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் உமாபதிக்கு ஜோடியாக ரேஷ்மா ரத்தோர் நடித்துள்ளார். இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேன், பாண்டியராஜன், மனோபாலா முதலானோர் நடிக்க டி.இமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. தம்பி ராமையாவின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் என்பதால் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், பேரரசு, துரை செந்தில்குமார், சுராஜ், பிரபு சாலமன், ஏ.எல்.விஜய், பொன்வண்ணன், அறிவழகன், ஐக், மனோபாலா என பல இயக்குனர்கள் படை சூழ நடிகர் சிவகார்த்திகேயன் டிரைலரை வெளியிட்டார். அதற்கு முன்பாக சிவகார்த்திகேயன் பேசும்போது
‘‘தம்பி ராமையா என் குடுபத்தை சேர்ந்தவர். அவரை நான் சித்தப்பா என்று தான் கூப்பிடுவேன். அவரது மகன் உமாபதி என்னை அன்போடு அண்ணா என்று தான் அழைப்பார். அதனால் அவன் எனக்கு தம்பி! நடிக்க வந்த புதிதில் நான் ரொம்பவும் கஷ்டப்பட்டுதான் டான்ஸ் ஆடுவேன். ஆனால், உமாபதி முதல் படத்திலேயே நன்றாக டான்ஸ் ஆடியிருக்கிறார். சினிமாவுக்கு தேவையான எல்லா விஷயங்களையும் கற்று வந்திருக்கிறார் உமாபதி என்பது டிரைலரை பார்த்தபோதே புரிந்துகொண்டேன். நான் விஜய் டிவியிலிருந்து வந்தவன். அதைப்போல நிறைய பேர் விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த படத்தின் மூலம் இன்ப சேகரும் இயக்குனராக அறிமுகமாகிறார். எல்லோருக்கும் இந்த படம் வெற்றிப் படமாக அமையும்’’ என்றார் சிவகார்த்திகேயன்!
வருகிற 16-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்தின் பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கிறார். ‘அட்டகத்தி’, ‘குக்கூ’ முதலான படங்களில் ஒளிப்பதிவாளரான பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை ’சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ சார்பில் சிவ ரமேஷ்குமார் தயாரித்துள்ளார்.
