ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவை விமர்சித்த பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு பாரதிராஜா கடும் கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆண்டாள் விவகாரத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவை மிகக் கேவலமாக இழிவாக விமர்சித்துள்ளார் எச்.ராஜா. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி எழுந்துள்ள நிலையில் வைரமுத்து அமைதி காக்கிறார். அவருக்கு ஆதரவான கட்சிகள் அமைதி காக்கின்றன. திரையுலகம் அமைதி காக்கிறது.
ஆனாலும், சமூக வலைதளங்களில் வைரமுத்துவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்துவுக்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு அளித்துள்ளார். வைரமுத்துவை விமர்சித்து வரும் எச்.ராஜாவுக்கு தனது கண்டனங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் பாரதிராஜா கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் தனி மனித உரிமை பறிக்கப்பட்டு எவ்வளவோ நாட்களாகி விட்டன. எழுத்து, கருத்து சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது.
தமிழை உலக உச்சிக்கு கொண்டு சென்ற பெருமைக்குரியவர் வைரமுத்து. அவர் தனி மனிதன் அல்ல. தமிழினத்தின் அடையாளம். நிறைய மனிதர்களின் வாழ்வுக்கு வழிகாட்டியாய் வாழும் மனிதனை நாக்கில் நரம்பில்லாமல் பேசுவதா? எச்.ராஜா போன்றவர்களால் இந்தியா துண்டாடப்பட போகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
வைரமுத்துவின் கருத்துக்களை தவறு என்று தட்டிக்கேட்க யாருக்கும் அதிகாரமில்லை. ஹெச்.ராஜாவால் வைரமுத்து போல் இலக்கியம் எழுத முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.