Saturday, April 25
Shadow

இளைஞர்களை விழுங்கும் போதை கலாச்சாரம் – விழிப்புணர்வை எழுப்பும் ‘முதற்கனல்’ மே மாதம் திரைக்கு!

இளைஞர்களை விழுங்கும் போதை கலாச்சாரம் – விழிப்புணர்வை எழுப்பும் ‘முதற்கனல்’ மே மாதம் திரைக்கு!

இன்றைய சமூகத்தில் வேகமாக பரவி வரும் போதைப்பொருள் பயன்பாட்டை மையமாகக் கொண்டு, இளைஞர்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்களை வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் ‘முதற்கனல்’ மே மாதம் திரைக்கு வர உள்ளது.

ஸ்ரீகெங்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.போத்திராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை, சமூக பிரச்சினைகளை வணிக ரீதியில் சொல்லும் தனித்துவம் கொண்ட இயக்குநர் ஆர்.வெங்கட்டரமணன் இயக்கியுள்ளார். முன்பு ‘அப்பா வேணாம்ப்பா’, ‘அதையும் தாண்டி புனிதமானது’ போன்ற படங்களில் மதுவின் பாதிப்பை எடுத்துக் காட்டிய அவர், இம்முறை போதைப்பொருள் கலாச்சாரத்தின் ஆபத்தை தீவிரமாக சித்தரிக்கிறார்.

புதுமுக நடிகர்கள் அஸ்வின், விக்னேஷ், ராஜேஷ், யோகேஷ், லட்சுமணன், ஆதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில், சமூகத்தின் பல தரப்பினரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. அவர்களுடன் டாக்டர் சிவா, ரோகிணி, சஜன் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்தவர்களும் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து இயக்குநர் வெங்கட்டரமணன் கூறுகையில், “மதுவை விட வேகமாக மனிதரை சீரழிக்கும் சிந்தடிக் போதைப்பொருட்கள் இன்றைய இளைஞர்களை ஆழமாக பாதிக்கின்றன. மிக எளிதாகக் கிடைக்கும் இந்தப் பொருட்கள், பள்ளி மாணவர்கள் முதல் வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் வரை பலரையும் அதன் பிடியில் சிக்க வைக்கின்றன. இதன் பின்னணி உளவியல் மற்றும் குடும்பங்களின் மீது ஏற்படும் தாக்கங்களை உணர்ச்சிகரமாகவும், விழிப்புணர்வு நோக்கிலும் இப்படத்தில் கூறியுள்ளோம்” என்றார்.

மேலும், சமூகச் செய்தியுடன் சேர்த்து குடும்பம் முழுவதும் பார்க்கக்கூடிய வணிக அம்சங்களும் இப்படத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பிடத்தக்க வகையில், இயக்குநர் தாமும் இப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவை கந்தசாமி கோபால் மேற்கொண்டுள்ள நிலையில், இசையை மீராலால் அமைத்துள்ளார். படத்தொகுப்பை டிஷ்யன்சாரதி கவனித்துள்ள இப்படத்திற்கு மருதபரணி, மோகன், ஆத்தூர் பெரியசாமி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

சமூகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பிரச்சினையை திரையுலக மொழியில் பதிவு செய்யும் முயற்சியாக உருவாகியுள்ள ‘முதற்கனல்’, விழிப்புணர்வையும் பொழுதுபோக்கையும் இணைக்கும் படமாக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.