
‘ஹோப்’ – நம்பிக்கையை மையமாகக் கொண்டு உலகத் தரத்தில் உருவான 30 நிமிட திரைப்பட அனுபவம்
திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் வெளியிட்ட முதல் பார்வை மற்றும் டிரெய்லர்
டிரைபாட் டிராவல் புரொடக்ஷன்ஸ் மற்றும் டி.எச்.எஃப் ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ராமு கண்ணன் – தேவகி நித்யானந்தம் தயாரிப்பில், ராமு கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 30 நிமிட படைப்பு ‘ஹோப்’.
குறும்படம் என்ற வழக்கமான வரையறைக்குள் அடங்காமல், ஒரு முழுநீள திரைப்படத்திற்கான தரம், தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு மதிப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், மனித வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு உணர்வான ‘நம்பிக்கையை’ மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
‘நாடோடிகள்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமான அபிநயா ஆனந்த், சுரேஷ் கண்ணன் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘ஹோப்’ படத்தின் முதல் பார்வை மற்றும் டிரெய்லர் கடந்த செப்டம்பர் 6, 2026 அன்று வெளியிடப்பட்டது. இயக்குநர்கள் வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், நடிகர்-இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி, இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ், இயக்குநர் நித்திலன் சாமிநாதன், ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன், படத்தொகுப்பாளர்கள் பிரவீன் கே.எல்., பிரதீப் இ. ராகவ், கமலா திரையரங்க நிர்வாக இயக்குநர் விஷ்ணு கமல் மற்றும் திரைப்பட மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் உள்ளிட்டோர் இந்த முதல் பார்வை மற்றும் டிரெய்லரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தினர்.
ஒரு குறும்படத்திற்காகவும் சர்வதேசத் தரத்திலான தொழில்நுட்பக் கலைஞர்களை ஒருங்கிணைத்துள்ளது ‘ஹோப்’ படக்குழு. 2022ஆம் ஆண்டு தேசிய விருது பெற்ற மலையாள திரைப்படமான ‘சவுதி வெல்லக்கா’விற்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் பாலி பிரான்சிஸ், தமிழில் முதன்முறையாக ‘ஹோப்’ படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கோபி துரைசாமி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ள இப்படத்தின் ஒலி வடிவமைப்பை 2023ஆம் ஆண்டு தேசிய விருது பெற்ற சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் எம் ஆகியோர் கவனித்துள்ளனர். அரவிந்த் மேனன் ஒலிக்கோர்வையை மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய பொறுப்புகளையும் இயக்குநர் ராமு கண்ணனே ஏற்றுள்ளார்.
“எதிர்மறை எண்ணங்களுக்கு எதிரான ஒரு நம்பிக்கையின் குரல்” – ராமு கண்ணன்
படம் குறித்து இயக்குநர் ராமு கண்ணன் கூறுகையில்,
“வாழ்க்கையில் சில முக்கியமான தருணங்களில் நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளும், நமது மனதில் உருவாகும் எதிர்மறை எண்ணங்களும் நம்மை பலவீனப்படுத்தலாம். அந்த நேரங்களில் நம்பிக்கையுடனும் தன்னம்பிக்கையுடனும் அவற்றை எதிர்கொள்வது எவ்வளவு அவசியம் என்பதை இந்தப் படைப்பின் மூலம் சொல்ல முயற்சித்துள்ளோம்.
தற்போது இந்தக் குறும்படத்தை ஒரு முழுநீள திரைப்பட அனுபவமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ‘ஹோப்’ கதையுடன் இணைந்து திரில்லர், நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் பின்னணியில் மேலும் மூன்று கதைகளை உருவாக்கி, நான்கு கதைகளைக் கொண்ட ஒரு ஆந்தாலஜி திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம். கதைகளின் வகைகள் மாறுபட்டாலும், அவை அனைத்தையும் இணைக்கும் மைய உணர்வாக நம்பிக்கையே இருக்கும்,” என்றார்.
திரைப்பட விழாக்களை நோக்கிய பயணத்தையும் ‘ஹோப்’ தொடங்கியுள்ளது. 30 நிமிடங்கள் கொண்ட இந்தப் படம் ஏற்கனவே சிம்லா மற்றும் கொல்கத்தாவில் நடைபெறவுள்ள திரைப்பட விழாக்களுக்கு தேர்வாகியுள்ளது. மேலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெறவுள்ள பல்வேறு திரைப்பட விழாக்களின் அறிவிப்புகளுக்காக படக்குழு காத்திருக்கிறது.
இதற்கிடையில், ‘ஹோப்’ படத்தின் டிரெய்லரை திரையரங்கு ரசிகர்களிடம் நேரடியாகக் கொண்டு செல்லும் முயற்சியாக, சென்னையின் கமலா திரையரங்கில் செப்டம்பர் 6 முதல் திரையிடப்படும் அனைத்து திரைப்படங்களின் இடைவேளையிலும் இந்த டிரெய்லர் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
தனது படைப்பின் மீது நம்பிக்கை வைத்து, அதன் முதல் பார்வை மற்றும் டிரெய்லரை வெளியிட்டு ஆதரவளித்த திரையுலக நண்பர்கள் மற்றும் முன்னணி கலைஞர்கள் அனைவருக்கும் இயக்குநர் ராமு கண்ணன் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
‘ஹோப்’ – குறும்படமாகத் தொடங்கி, முழுநீள திரை அனுபவத்தை நோக்கி பயணிக்கும் நம்பிக்கையின் கதை.
டிரெய்லர்:
