
‘மெர்சல்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் நிகழ்ச்சி நடக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் நடித்து, அட்லீ இயக்கியிருக்கும் படம் ‘மெர்சல்’. ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி, ஆகஸ்டு 20-ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய படக்குழுவைச் சேர்ந்த ஒருவர், “இந்த பிரம்மாண்ட விழாவில் ரஹ்மான் சார் இசை நிகழ்ச்சி நடந்தால் நடக்கலாம். அவர் இன்னும் இறுதி முடிவை தெரிவிக்கவில்லை. தயாரிப்பு தரப்பு அவர் சிறிய நிகழ்ச்சியாவது நடத்துவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறது” என்றார்.
‘மெர்சல்’ படத்தில், பஞ்சாயத்து தலைவர், மருத்துவர் மற்றும் மந்திரவாதி என மூன்று கதாபாத்திரங்களில் விஜய் நடிக்கவிருப்பதாகத் தெரிகிறது. தேணாண்டாள் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோரும் நடித்துள்ளனர்.
தீபாவளி அன்று தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது
