
கருப்பன் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்துள்ள அடுத்த படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து டீசர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக பூர்த்தி செய்தது. படம் எந்த அளவிற்கு பூர்த்தி செய்தது என்பதை பார்த்து விடலாம்.
ஆந்திர மாநிலம் எமசிங்கபுரம் என்ற ஒரு மலைகிராமம் தான் படத்தின் கதைக்களம். இங்கு வாழும் அனைவரும் நேர்மையாகவும், யாரையும் துன்புறுத்தாமலும் திருடுவது மட்டும் தான் இவர்களது தொழில். எமனையே முதற்கடவுளாக
நினைத்து வழிபடுகின்றனர். இந்த கூட்டத்திற்கு விஜய் சேதுபதி தான் இளவரசர்.
தனது நண்பர்கள் இருவருடன் திருடுவதற்காக சென்னை வருகிறார் விஜய் சேதுபதி. அங்கு நாயகி நிகாரிகாவை சந்திக்கிறார். அவரை கடத்திச் சென்று விட வேண்டும் என்று சில திட்டங்கள் போட்டு தோல்வியடைந்தாலும், இறுதியாக அவரை கடத்தி தனது கிராமத்திற்கு சென்று விடுகிறார் விஜய் சேதுபதி.
நிகாரிகாவை 15 நாட்கள் மட்டுமே சந்தித்து பேசி, பழகிய கெளதம் கார்த்திக், அவரை காப்பாற்ற அந்த எமசிங்கபுரத்திற்குள் நுழைகிறார். எதற்காக விஜய் சேதுபதி நிகாரிகாவை கடத்திச் செல்கிறார்..?? காப்பாற்ற சென்ற கெளதம் கார்த்திக்கின் நிலை என்ன..?? என்பதே படத்தின் மீதிக் கதை.
விஜய் சேதுபதி வழக்கம் போல் தனது கதாபாத்திரத்திற்கு தேவையானதை செம்மையாகவே பூர்த்தி செய்திருக்கிறார். அதே யதார்த்த நடிப்பு, டைமிங் என தனக்கேற்ற வேலையை நிறைவாகவே செய்து முடித்திருக்கிறார்.
கெளதம் கார்த்திக் சினிமா கேரியரில் நிச்சயம் இப்படம் அவருக்கு ஒரு மைல்கல் தான். துருதுருவென தனது கேரக்டருக்கு தேவையானதை கொடுத்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் ஏற்றிருந்தாலும் ஓவர் டோஸ் ஆகியிருக்கும்.
நாயகி நிஹாரிகா தமிழ் சினிமாவில் ஒரு புதுவரவு. இன்னும் சில தமிழ் படங்கள் இவருக்காக காத்திருக்கின்றன. களையான முகம், நகைச்சுவை கலந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். காயத்ரி வழக்கம் போல தன் கண்களாலும், அசையாமல் பேசும் உதடுகளாலும் கவர்கிறார்.
காமெடி என்ற பெயரில் ரமேஷ் திலக், ராஜ்குமார், டேனி என மூவரும் கொஞ்சம் பொறுமையை சோதித்தாலும் காப்பாற்ற வந்தவனாக விஜய் சேதுபதி ஆங்காங்கே சில கவுண்டர் அடித்து அவர்களிடம் இருந்து காப்பாற்றி விடுகிறார். வலு இல்லாத கதைக்களம் படத்திற்கு சற்று சரிவை கொடுத்திருக்கிறது.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ஒருமுறை கேட்கும் ரகம், பின்னனி இசையில் ஏற்றம் இறக்கத்தை காண்பித்து மிரட்டியிருக்கிறார்.
ஸ்ரீ சரவணின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அற்புதம்
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – ஒரு நல்ல நாளில் குடும்பத்தோடு தியேட்டருக்கு ஒரு முறை படையெடுக்கலாம்.. Rank 3/5