Friday, April 17
Shadow

தர்பாரில் நடிப்பவர்கள் பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்: செய்திதொடர்பாளர் வேண்டுகோள்

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள திரைப்படத்தில் நடிகை நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்துக்கு கடைசியாக பேட்ட திரைப்படம் வெளியானது. அடுத்து அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். அரசியல் மற்றும் சமூக கருத்துக்களைக் கொண்ட படமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாராவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சந்திரமுகி, குசேலன் திரைப்படத்துக்கு பிறகு நயன்தாரா மீண்டும் ரஜினியுடன் நடிக்கவுள்ளார்.

ரஜினியின் 167வது படமாக இது உருவாகவுள்ளது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ’பேட்ட’ படத்துக்குப் பிறகு அனிருத் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் 80களில் வரும் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளத்தாகவும், ஏப்ரல் 10 ஆம் தேதி மும்பையில் ஷூட்டிங் தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாபநாசம் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். இவர் போராளி, ஜில்லா, நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இது குறித்து தர்பார் படத்தின் செய்தி தொடர்பாளரை Cinema Pluz செய்தியாளர் தொடர்பு கொண்ட போது அவர், இது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்தார். மேலும் அவர் தனது டுவிட்டர் பதிவில், தர்பார் படத்தில் நடிகை நயன்தாரா நடிப்பது உண்மையே. அவரை தவிர மற்ற யார் யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்து அதிகார்பபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.