கடந்த 2003ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்து ரிலீசான படம் சாமி. த்ரிஷா, விவேக், ரமேஷ் கண்ணா எனப் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரிய ஹிட். அதன் தொடர்ச்சியாக மீண்டும் விக்ரம் – ஹரி கூட்டணியில் சாமி 2 படம் உருவானது. இப்படத்தில் திரிஷாவுடன் இன்னொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
இந்நிலையில், இன்று அப்படத்தின் டிரெய்லர் ரிலீசாகியுள்ளது. சாமி முதல் பாகத்தைப் போலவே இப்படத்திலும் விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். முந்தைய பாகத்தைப் போலவே இதிலும் ஆக்சன் காட்சிகள் நிறைந்திருப்பது டிரெய்லர் மூலம் தெரிகிறது.
இந்த படத்தில் வில்லனாக பாபி சிம்ஹா நடித்திருக்கிறார். எனவே, படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. முதல் பாகத்தில் காமெடி போர்ஷனுக்கு விவேக் நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் சூரி நடித்துள்ளார்.
முதல் பாகத்தில் ‘நான் போலீஸ் இல்ல பொறுக்கி’ என்ற விக்ரமின் வசனம் பிரபலமானது. தற்போது இரண்டாம் பாகத்தில், ‘நான் சாமி இல்ல பூதம்’ எனப் பேசி மிரள வைக்கிறார் விக்ரம். அதோடு, நான் தாய் வயித்துல பிறக்கல, பேய் வயித்துல பிறந்தேன்’ என பஞ்சுகளை அள்ளி வீசுகிறார்.
ஏற்கனவே, சிங்கம் மற்றும் அதன் அடுத்த பாகங்களில் கிராபிக்ஸ் காட்சிகளால் மக்களை பயமுறுத்திய ஹரி, இதிலும் அதே மாயத்தைச் செய்துள்ளார். அது மட்டுமே கொஞ்சம் மிரள வைக்கிறது. மற்றபடி, ஹரி படங்களுக்கே உரித்தான ஆக்சன், காமெடி, காதல் எதற்கும் இப்படத்திலும் குறையிருக்காது என நம்பலாம்.