
தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைக்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் ரசிகர்கள், ரசிகைகள் நிறைய பேர் இருக்கின்றனர். நடிகர்களின் படங்களுக்கு பாலாபிஷேகம், சூடம் ஏற்றுவது போன்றவற்றை செய்வதை பார்த்திருக்கிறோம். ஒரு சிலர் கோவில் கட்டி சிலை வைக்கும் அளவுக்கும் சென்றிருக்கிறார்கள். ஆனால் இங்கு ரசிகை ஒருவர் தான் உயிரிழப்பதற்கு முன்னாள் தனது சொத்துக்கள் அனைத்தையும் நடிகர் பெயரில் எழுதிவிட்டு இறந்துள்ளார். மும்பையை சேர்ந்த ஹரிச்சந்திரா திரிபாதி என்ற பெண் ரசிகை ஒருவர் தனது சொத்துக்களை, பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்துக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார்.
சஞ்சய்தத்தின் தீவிர ரசிகையான இவர் தனது தாயுடன் வசித்து வந்தார். தனது நோய்க்காக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், சமீபத்தில் மரணம் அடைந்தார். அந்த பெண்ணின் வங்கி கணக்கு, லாக்கர் ஆகியவற்றை வங்கி அதிகாரி ஆய்வு செய்தார். அப்போது, இருப்பில் உள்ள பணம், லாக்கரில் இருக்கும் தனது பொருட்கள் அனைத்தையும் நடிகர் சஞ்சய்தத்துக்கே கொடுக்க வேண்டும் என்று அவர் உயில் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுபற்றி சஞ்சய்தத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இப்படிப்பட்ட ஒரு ரசிகையின் அன்பை அறிந்த சஞ்சய்தத் நெகிழ்ச்சி அடைந்தார். பணம், உடமைகளை தனக்கு எழுதி வைத்திருந்ததை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தார். அதை ஏற்க மறுத்த அவர், மறைந்த ரசிகையின் பணம், பொருட்கள் அனைத்தையும் அவருடைய குடும்பத்தாருக்கே கொடுக்க ஏற்பாடு செய்தார்.
இந்த ரசிகையின் செயல் திரையுலகினரை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
