
கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் சுந்தரபாண்டியன். சசிகுமாரின் திரைப்பயணத்தில் இந்த படம் ஒரு மிக முக்கியமான இடம் பிடித்தது. சுப்ரமணியபுரம், ஈசன் ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ்.ஆர்.பிரபாகரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார்.
முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத இயக்குனராக அறியப்பட்ட எஸ்.ஆர்.பிரபாகரன், தொடர்ந்து ‘இது கதிர்வேலன் காதல், ‘சத்ரியன்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்த இரு படங்களுக்கும் ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், சசிகுமார், எஸ்.ஆர்.பிரபாகரன் மீண்டும் இணையவிருக்கின்றனர். அதுவும் சுந்தரபாண்டியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் இணையவிருக்கிறார்களாம்.
தற்போது சசிக்குமார், சமுத்திரக்கனி கூட்டணி ‘நாடோடிகள் 2’ படப்பிடிப்பை மதுரையில் தொடங்கியிருக்கிறார்கள். இந்தப் படம் முடிந்த கையோடு ‘சுந்தரபாண்டியன் 2’ படம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.