
மோகன் ராஜாவின் ‘வேலைக்காரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் கைவசம் பொன்ராம் படம், ‘இன்று நேற்று நாளை’ ரவிகுமார் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் புதிய படங்கள் உள்ளது. இதில் பொன்ராம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். ஏற்கெனவே, சிவா – பொன்ராம் காம்போவில் ரிலீஸான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘ரஜினி முருகன்’ மெகா ஹிட்டானது.
ஆகையால், இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களிடை அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இப்படத்திற்கென சமந்தா பிரத்யேகமாக சிலம்பம் பயிற்சி மேற்கொண்டாராம். மேலும், சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, யோகி பாபு என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறார்கள். டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.
’24 AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா இதனை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இப்படத்திற்கு ‘சீமராஜா’ என டைட்டில் வைத்து இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான இன்று இப்போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து டிரெண்டாகி வருகிறது.