Monday, August 10
Shadow

மௌனங்களுக்குள் புதைந்த மனிதர்களின் கதைகள்… சீனு ராமசாமியின் ‘பெரும் மௌனங்கள்’ விரைவில் வெளியீடு!

மௌனங்களுக்குள் புதைந்த மனிதர்களின் கதைகள்… சீனு ராமசாமியின் ‘பெரும் மௌனங்கள்’ விரைவில் வெளியீடு!

ஈரோடு புத்தகக் கண்காட்சியில் வம்சி பதிப்பகம் வெளியிடுகிறது

ஈரோடு, ஆகஸ்ட் 7, 2026:
சில மனிதர்கள் பேசாமல் கடந்து செல்கிறார்கள். ஆனால், அவர்களுடன் நாம் வாழ்ந்த தருணங்கள் மட்டும் நம்மை விட்டு எளிதில் அகல்வதில்லை. சொல்லப்படாமல் மனதுக்குள் தேங்கிக் கிடக்கும் நினைவுகளும், உறவுகளும், சந்தித்த மனிதர்களும், கற்றுக்கொடுத்த ஆசான்களும் ஒரு கட்டத்தில் எழுத்தாக வெளிப்படும். அப்படியான ஆழமான நினைவுகளையும் அனுபவங்களையும் தனது எழுத்தின் வழியே பதிவு செய்திருக்கிறார் திரைப்பட இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி.

அவரது அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பாக உருவாகியுள்ள ‘பெரும் மௌனங்கள்’ என்ற நூல், வம்சி பதிப்பகம் சார்பில் நடைபெறும் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் விரைவில் வெளியாக உள்ளது.

திரைப்படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல், இலக்கியத்தின் மீதும் தொடர்ந்து பயணித்து வரும் சீனு ராமசாமி, ஏற்கெனவே தமிழ் இலக்கிய உலகிற்கு 13 கவிதைத் தொகுப்புகளை வழங்கியுள்ளார். அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக வெளியாகும் ‘பெரும் மௌனங்கள்’, அவரது திரையுலக அனுபவங்களைக் கடந்து, மனிதர்களுடனான அவரது ஆழமான உறவுகளையும், வாழ்க்கையில் அவர் சந்தித்த பல்வேறு மனிதர்களால் ஏற்பட்ட தாக்கங்களையும் பேசும் படைப்பாக உருவாகியுள்ளது.

ஒரு இயக்குநராக பல கதாபாத்திரங்களை திரையில் உருவாக்கிய சீனு ராமசாமி, இந்த நூலில் தனது வாழ்க்கைப் பாதையில் எதிர்கொண்ட உண்மையான மனிதர்களையும் அவர்களுடன் தொடர்புடைய நினைவுகளையும் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். மனிதர்களின் வெளிப்படையான செயல்களுக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகள், சொல்லப்படாத வார்த்தைகள், உறவுகளின் நுட்பங்கள், நட்பின் ஆழம், ஆசான்களிடம் பெற்ற அனுபவங்கள் என பல்வேறு தளங்களில் பயணிக்கும் கட்டுரைகளின் தொகுப்பாக ‘பெரும் மௌனங்கள்’ அமைகிறது.

தற்போது சீனு ராமசாமி இயக்கிய ‘இடம் பொருள் ஏவல்’ மற்றும் ‘இடி முழக்கம்’ ஆகிய திரைப்படங்களின் வெளியீட்டுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அவரது இலக்கியப் படைப்பான ‘பெரும் மௌனங்கள்’ வெளியாக இருப்பது அவரது படைப்புலகப் பயணத்தில் கவனம் பெறும் மற்றொரு முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.

இந்த நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள எழுத்தாளரும் பதிப்பாசிரியருமான கே.வி. சைலஜா, சீனு ராமசாமியின் எழுத்தின் தன்மையையும் நூலின் உள்ளடக்கத்தையும் குறிப்பிட்டு, மனிதர்கள் தங்களுக்குள் இருக்கும் மௌனத்தை கலைத்து, தங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்து பேசுவது மிகவும் அரிதான ஒன்று என்றும், அந்த வகையில் சீனு ராமசாமி தான் எதிர்கொண்ட மனிதர்கள், ஆசான்கள், உறவுகள் மற்றும் நண்பர்கள் குறித்த தனது ஆழமான நினைவுகளையும் உணர்வுகளையும் இந்நூலின் வழியாக பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

திரைப்படம், கவிதை, இலக்கியம் என வெவ்வேறு களங்களில் தொடர்ந்து இயங்கி வரும் சீனு ராமசாமியின் படைப்புப் பயணத்தில், ‘பெரும் மௌனங்கள்’ அவரது தனிப்பட்ட அனுபவங்களின் மற்றொரு பரிமாணத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வார்த்தைகளால் சொல்லப்படாதவற்றுக்கும் ஒரு குரல் உண்டு. அந்தக் குரலைக் கேட்கச் செய்யும் முயற்சியாக உருவாகியுள்ள ‘பெரும் மௌனங்கள்’, ஈரோடு புத்தகக் கண்காட்சியில் வாசகர்களை சந்திக்கத் தயாராகிறது.