
நடிகர்கள் சிம்பு, வடிவேலு, நடிகை திரிஷா ஆகியோர் மீது பட அதிபர்கள் சங்கத்தில் தயாரிப்பாளர்கள் புகார்கள் அளித்து இருந்தனர். இது, பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கூறியிருந்தார். வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்ததாகவும், அதில் திடீரென்று நடிக்க மறுத்து வடிவேலு விலகி விட்டதாகவும், இதனால் தனக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் குற்றம் சாட்டி இருந்தார். நடிகை திரிஷாவை ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சாமி-2 படத்துக்கு ஒப்பந்தம் செய்து இருந்தனர். ஆனால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று அவர் விலகி விட்டார். இதனால் திரிஷா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சிம்பு மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தாமதம் செய்வதாக சமீபத்தில் குற்றம் சாட்டப்பட்டு பிரச்சினை கிளம்பியது. அதற்கு பதில் அளித்த விஷால் புகாருக்கு இன்னும் சிம்பு பதில் அளிக்கவில்லை என்று கூறினார்.

இந்த நிலையில் சிம்பு, வடிவேலு, திரிஷா ஆகிய மூவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து நடிகர் சங்கத்துக்கு பதில் அனுப்பி உள்ளனர். அதில் சிம்பு அளித்துள்ள பதிலில் “அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்துக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். படம் வெளியாகும்போது என் மீது குற்றம் சொல்லாமல் இப்போது கூறுவது உள்நோக்கம் கொண்டது” என்று கூறியுள்ளார்.
திரிஷா அனுப்பி உள்ள விளக்க கடிதத்தில் “சாமி-2 படத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால் அந்த படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன். இதற்காக போட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்து திருப்பி அனுப்புகிறேன்” என்று கூறியுள்ளார். இதன்மூலம் திரிஷாவை சமரசம் செய்து எப்படியாவது படத்தில் நடிக்க வைத்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த படக்குழுவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

வடிவேலுவும் இம்சை அரசன் இரண்டாம் பாகம் படத்தில் தொடர்ந்து நடிக்க சில நிபந்தனைகளை விதித்து இருக்கிறார். இவர்கள் அளித்த விளக்கங்களை நடிகர் சங்கம் பெற்று தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அனுப்பி இருக்கிறது.
இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதா? வேண்டாமா? என்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் விரைவில் முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
