Sunday, June 4
Shadow

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ரகசியத்தை உடைத்த தயாரிப்பாளர்

ராஜ் சேதுபதி இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ், இந்துஜா, சாந்தினி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பில்லா பாண்டி’.இப்படத்தில் அஜித் ரசிகராக நடித்திருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். தீபாவளிக்கு ‘சர்கார்’ படத்துடன் இப்படமும் வெளியாகவுள்ளது.

‘பில்லா பாண்டி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சூரி, கருணாஸ், சீமான், தயாரிப்பாளர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

இவ்விழாவில் ‘விஸ்வாசம்’ தயாரிப்பாளர் தியாகராஜன் பேசியதாவது:

”இப்படத்தின் இசையமைப்பாளர் இளையவனைப் பாராட்ட வேண்டும். இளையராஜா அளவுக்கு பிரதாமான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். ஆர்.கே.சுரேஷ் எனது சகோதரர் மாதிரி. விநியோகஸ்தராக வந்து, பல வெற்றிப் படங்களை விநியோகித்திருக்கிறார். பிறகு தரமான 2 படங்களைத் தயாரித்தார். அதில் ‘தர்மதுரை’ படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன்.

பல படங்களில் வில்லனாக நடித்தார். அதுவும் ‘தாரை தப்பட்டை’ படத்தில் பிரமாதமாக நடித்திருந்தார். அவருக்கு பெரிய எதிர்காலம் நிச்சயமாக இந்த தமிழ் திரையுலகில் இருக்கிறது. தல ரசிகரை வைத்துக்கொண்டு பாடல்கள் மற்றும் சண்டைக்காட்சிகளை அருமையாக வடிவமைத்திருக்கும் இயக்குநருக்கு வாழ்த்துகள்.

இங்கு பல அஜித் ரசிகர்கள் இருப்பதால், ஒரு விஷயத்தைச் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். ‘விஸ்வாசம்’ ஷூட்டிங் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இப்படத்தில் நீங்க தெய்வமாக நினைக்கிற அஜித் சார், இதில் ரொம்ப வித்தியாசமான ரோலில் நடித்திருக்கிறார். அதை அந்த அளவுக்கு பிரமாதமாக பண்ணியிருக்கிறார். அதிலும் ஸ்பெஷலாகச் சொல்ல வேண்டுமென்றால் 2 பாடல்களில் சூப்பராக டான்ஸ் ஆடியிருக்கிறார். அதை பல முறை நானே பார்த்துவிட்டேன். அனைத்து வேலைகளையும் மும்முரமாக நடத்தி வருகிறோம். அப்படம் பொங்கலுக்கு வெளியிட தீர்மானித்திருக்கிறோம். உங்களுடைய ஆதரவு வேண்டும். நிச்சயமாக நீங்கள் எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றிப் படமாக அமையும்”.