
முருகதாஸ் திறமையான இயக்குநர், திரைப்பட பாடல்களுக்கு நன்றாக காட்சிகளை அமைக்கிறார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடன் இணைவது மகத்தானது என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
விஜய் படம் உள்பட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
”முருகதாஸ் திறமையான இயக்குநர், திரைப்பட பாடல்களுக்கு நன்றாக காட்சிகளை அமைக்கிறார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடன் இணைவது மகத்தானது. மெர்சல் பாடல்களிலிருந்து வித்தியாசமான பாடல்களை விரும்புபவர்களுக்கு இந்தப் படத்தின் பாடல்கள் விருந்தாக அமையும். விஜய்யை பாடவைக்க வாய்ப்பிருக்கிறதா என்பதைஒ பார்த்து வருகிறோம், ஒருவரை ஒரு விஷயத்தைச் செய்யுமாறு வற்புறுத்தக் கூடாது. கடைசியில் இது அவர் படம்தான். பார்ப்போம்” என்றார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஆமிர்கான், அசின் நடித்த ‘கஜினி’ இந்திப் படத்துக்கு ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் – ரஹ்மான் கூட்டணி இணைந்திருப்பதால் விஜய் படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய் – முருகதாஸ் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன் மற்றும் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
