
தெலுங்கு திரைப்படத்துறைக்கு இவராற்றிய சேவைக்காக 2012இல் இந்தியக் குடியரசின் மூன்றாவது உயரிய குடிமை விருதான பத்ம பூசன் இவருக்கு வழங்கப்பட்டது. இந்திய திரைப்படத்துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குச் சீரிய பங்களித்தமைக்காக 2009இல் வாழ்நாள் சாதனைக்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.
இராமாநாயுடு 1991இல் இராமாநாயுடு அறக்கட்டளை ஏற்படுத்தி பலருக்குக் கல்விக்காக உதவியுள்ளார்.
இராமாநாயுடுவின் மனைவி இராசேசுவரி ஆவார். இவர்களுக்கு சுரேசு, வெங்கடேசு என்ற இரண்டு மகன்களும், தக்குபாத்தி லட்சுமி என்ற ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் சுரேசு படத் தயாரிப்பாளராகவும், இளைய மகன் வெங்கடேசு முன்னணி நடிகராகவும் உள்ளனர். சுரேசின் மகனும், ராமாநாயுடுவின் பேரனுமான ராணா டக்குபாதி தெலுங்குத் திரைப்பட உலகில் முன்னணி இளம் நடிகர் ஆவார்.
இராமாநாயுடுவின் மகள் லட்சுமியின் கணவர் பிரபல நடிகர் நாகார்ஜூனா ஆவார். இவர்கள் தற்போது மணமுறிவு பெற்றுள்ளனர். இவர்களுக்கு பிறந்த நாக சைதன்யாவும் தற்போது தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார்.
