அந்தோணிதாசன், தஞ்சை மாவட்டத்திலுள்ள ரெட்டிப்பாளையம் எனும் சிறு நகரில் பிறந்த ஒரு தமிழ் இசைக் கலைஞன் ஆவார்.[1] இவர் நாட்டுப்புற இசைப் பாடகர், தெருக்கூத்து இசைப் பாடகர், நாட்டுப்புறக் கலைஞரும் ஆவார். இவரது பெயரை “ஆண்டனி தாசன்”, “ஆண்டனி தாஸ்” என்றும் உச்சரிப்பர். குறுகிய காலத்தில் தமிழ்த் திரையுலகில் அதிக அளவில் பாடல்கள் இயற்றிப் பாடும் கலைஞராக உருவெடுத்துள்ளார். திரையிசையில் பெரும்பாலும் பின்னணிப் பாடகராக, சந்தோஷ் நாராயணன், ஷான் ரால்டன், விஷால் சந்திரசேகர் போன்ற புதுப்புது கலைஞர்களோடு இணைந்து பணியாற்றி வருகிறார். இது தவிர அவர் மேடையில் ஆடவும், நடிக்கவும் செய்வதோடு, சில இசைக் கருவிகளையும் வாசிக்கிறார்.
இசைப் பணி தவிர, சில தமிழ்த் திரைப்படங்களில், குறிப்பாகத் தான் பாடிய பாடல்களில் கௌரவத் தோற்றத்தில் தோன்றுவார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா எனும் திரைப்படத்தில் ஒரு குண்டர்/அடியாளாக நடித்த நீண்டநேர கௌரவத் தோற்றம் இங்குக் குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்தியாவில் வெளியாகும் தி தேவாரிஸ்ட்ஸ், என்ற இசை தொடர்பான தொலைக்காட்சித் தொடரிலும் பங்குபெற்றிருந்தார். இத்தொடர் ஓர் பயணக்குறிப்புடன் கூடிய இசை ஆவணப்படம் ஆகும்.
தன் இசைக்குழுவான “அந்தோணியின் பார்ட்டி” என்ற நாட்டுப்புற மின்னணு இணைவு இசைக் குழுவுடன் பயணித்து பல கச்சேரிகள் நிகழ்த்தி வருகிறார். தர்புகா சிவா ஒருங்கிணைத்து, மற்றொரு புகழ் பெற்ற இசைக் கலைஞரான பிரதீப் பங்காற்றும் மற்றுமொரு நாட்டுப்புற இணைவு இசைக்குழுவான “லா பொங்கல்” இசைக்குழுவோடும் இணைந்துள்ளார். இவ்விசைக்குழு விழாக் கச்சேரி வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அக்குழுவின் படைப்புகளுள் புகழ்பெற்ற ஒன்றான “வண்டியிலே நெல்லு வரும்” என்ற பாடலை எம் டிவி கோக் ஸ்டூடியோ இந்தியா 2012-இல், மூத்த பாடகரான உஷா உதுப்புடன் இணைந்து அரங்கேற்றினர்.
2014 செப்டம்பரில், “தமிழ்த் திரையுலகின் நம்பிக்கை” என்ற விருதும், “நாட்டுப்புறக் கலையின் அடையாளம்” என்ற பாராட்டும் அந்தோனி தாசனுக்கு வழங்கப்பட்டது. இவ்விருது பிரதர்சினி 2014 என்ற தென்னிந்தியப் பண்பாட்டு விழாவில் வழங்கப்பட்டது.