Saturday, January 28
Shadow

உடன்பிறப்பே திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

2டி எண்டர்டெயின்மெண்ட் சூர்யா-ஜோதி்கா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் உடன்பிறப்பே படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.
அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட படம்.
உயிருக்கு உயிரான அண்ணன்-தங்கை. தங்கையின் கணவர் நேர்மையானவர். அடிதடிகளை விரும்பாதவர். தன் மனைவியின் அண்ணன் கொஞ்சம் அடாவடி பேர்வழி. அதுவே இரு குடும்பத்தின் பிரிவுக்குக் காரணமாகிறது. பத்து, பதினைந்து ஆண்டுகளாகப் பேசாமல் பாசப்போராட்டம் நடத்தும் இரு குடும்பமும் இணைவது தான் கதை.
புதுக்கோட்டை மாவட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால், எங்குப் பார்த்தாலும் பசுமை. ஆனால் படத்தின் கதையில் பெரிய அளவில் வறட்சி. கதை என்பதை விடத் திரைக்கதையில் என்பது தான் பொருத்தமாக இருக்கும். அண்ணனாக சசிக்குமார், தங்கையாக ஜோதிகா, தங்கை கணவராக சமுத்திரக்கனி, வீட்டு வேலைக்காரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜோதிகாவின் 50வது படம். ஜோதிகாவை சுற்றிய கதைகளம். கிணற்றில் இரு குழந்தைகள் தவறி விழுகிறது. ஏதாவது ஒரு குழந்தையைத் தான் காப்பாற்ற முடியும் என்கிற நிர்ப்பந்தம். தன் குழந்தையைக் கழற்றிவிட்டு, அண்ணன் குழந்தையைக் காப்பாற்றுகிறார் ஜோதிகா. பாசம் என்பது அண்ணன்-தங்கை இடையே தானா? பெற்ற குழந்தையிடம் ஒரு தாய் எப்படி அந்த பாசத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடியும்? அப்படி முடியும் படியான கல் நெஞ்சம் இருந்தால், எப்படி அண்ணனுக்கு மட்டும் இவ்வளவு பாசமாக இருக்க முடியும்? சமுத்திரக்கனி ஒரு நேர்மையான ஆள். அவருக்கு அடிதடியெல்லாம் பிடிக்காது. அந்த பக்கமே இருக்கமாட்டேன் என்கிற ஆள். அவர் எப்படி அடிதடி ஆரவாரம் செய்வதாகக் கூறப்படும் சசிக்குமார் குடும்பத்தில் பெண் எடுத்தார்?
அடிதடிக்காரர்… என்பது தான் சசிக்குமார் மீதான குற்றச்சாட்டு. அதுமாதிரியான அழுத்தமான காட்சி, ஒரு இடத்தில் கூட இல்லை. கொம்பன் படத்தில் வரும் ராஜ்கிரண் போல, முறைப்பதும், விழிப்பதுமாய் குளோஸ்-அப் ஷாட்டுகள் மட்டுமே வைக்கப்படுகிறது.
ஜோதிகா உண்மையில் பல இடங்களில் ராதிகாவைப் போலவே தோற்றம் தெரிகிறார். இரட்டை மூக்குத்தியில் டெல்டா பெண்ணாகவே மாறியிருக்கும் ஜோதிகா, தன் தலை முடியால் கொலை செய்யும் காட்சியில் தெறிக்கவிடுகிறார். பிரிவை நினைத்து அழும் போதும், அண்ணன் குடும்பத்தில் சம்பந்தம் செய்யும் போது மகிழும் போதும், கணவனிடம் தவிக்கும் போதும், ஒரு கட்டத்தில் கொலை செய்யும் போதும்… அந்தந்த கதாபாத்திரமாகவே மாறும் ஜோதிகாவின் நடிப்பு படத்திற்கு ஆறுதல்.
காதல் என்பதைக் கடுகளவு கூட சேர்க்காமல், நேரடியாக குடும்பத்திலிருந்து தொடங்கும் கதை. ஒருபுறம் சமுத்திரகனி-ஜோதிகா, மற்றொருபுறம் சசிக்குமார்-சிஜா ரோஸ். 50யை கடந்த கதாபாத்திரங்கள் என்பதால் அங்குக் காதல் தேவைப்படாமல் இருந்திருக்கலாம். படம் தொய்வாக மிக முக்கிய காரணம். நல்லவன் வேஷம் போடும் வில்லன் கதாபாத்திரம் கலையரசனுக்கு. அவர் அப்படி தான் என்பது கிட்டத்தட்ட முதல் காட்சியில் தெரிந்துவிட்டது.
காதல் இல்லை, நகைச்சுவை இல்லை, பல இடங்களில் சென்டிமெண்ட் கூட அழுத்தமாக இல்லை. அதனால் 2:15 மணி நேரத் திரைப்படம், எப்போது முடியும் என்கிற எதிர்பார்ப்பைத் தந்துவிடுகிறது.
படத்தின் பிளஸ்: 
ஜோதிகா, சமுத்திரகனி, சசிகுமார் ஆகியோரின் நடிப்பு, வேல்ராஜ் ஒளிப்பதிவு
படத்தின் மைன்ஸ்: 
படத்தில் நிறைய ஓட்டைகள். சசிகுமார்  யாரையும் அடித்து துவம்சம் செய்ததாகக் காட்சிப்படுத்தவில்லை. சமுத்திரக்கனியின் கதாபாத்திரத்திற்கு தேவையான அம்சங்களைத் திரைக்கதையில் பொருத்தவில்லை என்பதும் ஒரு வீக் பாய்ண்ட்.
மொத்தத்தில் உடன்பிறப்பே… ஓகே.என்ற ரகமே.