Wednesday, October 28
Shadow

சின்னக்குயில் சித்ரா பிறந்த தின பதிவு

சித்ரா அல்லது கே. எஸ். சித்ரா எனப் பொதுவாக அழைக்கப்படும் கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒரியா, இந்தி, அசாமிய, வங்காளம் போன்ற பல இந்திய மொழிகளில் பாடி வருகிறார். இவர் ஆறு தடவைகள் இந்தியத் தேசிய திரைப்பட விருதுகளையும், ஆறு தடவைகள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும், மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் தென்னிந்தியர்களிடையே சின்னக்குயில் சித்ரா எனப் பிரபலமாக அழைக்கப்படுகிறார்.

திருவனந்தபுரத்தில் 1963 ஆம் ஆண்டில் ஜூலை 27ல் சித்ரா பிறந்தார். வானொலியில் பாடகராகப் பெயர் பெற்ற கிருஷ்ணன் நாயருக்கும், வீணை வித்தகி சாந்தகுமாரிக்கும் இளையமகள் ஆவார். இவரின் சகோதரியான பீனா, இனிமையான குரலைக் கொண்டிருந்தார். கிருஷ்ணன் நாயருடைய மனைவி ஒரு பள்ளியில் இசையும் கற்பித்து வந்தார். அபூர்வ குரலினிமையைப் பெற்றிருந்த பீனாவிற்கு சிறு வயது முதல் கவனத்துடன் தேவையான பயிற்சிகளெல்லாம் முறைப்படி அளிக்கப்பட்டது. சித்ராவின் இளவயதிலேயே பாடல்களை நினைவில் கொண்டு பாடினார். அவர் தம் ஐந்தாம் பிராயத்திலேயே அகில இந்திய வானொலி ஒளிபரப்பிய சங்கீத ரூபகத்தில் சில வரிகள் பாடினார்.

பள்ளியில் பயின்ற நாட்களிலே அவர் தந்தையார் தம் மகள் சார்பாக தேசிய அளவில் திறமை வாய்ந்தோருக்கான உதவித்தொகைக்கு பதிவு செய்தார். நேர்முகத் தேர்வுக்கு சென்றபொழுது இரண்டு வருடம் சங்கீதம் கற்றிருக்க வேண்டும் என்று குழுவினர் வலியுறுத்தியபோதும், பதிமூன்று வயது சித்ரா தோடி ராகத்தின் சிக்கலான ஸ்வரங்களை நிரவல் செய்து தம் தகுதியை நிரூபித்து ஏழு வருட உதவித்தொகையைப் பெற்றார். பின்னர், இசை பட்டப்படிப்பில் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.

இவர் பேராசிரியர் ஓமண்ணக்குட்டியிடம் இசை பயின்று வந்தார். அவருடைய சகோதரர் எம். ஜி. ராதாகிருஷ்ணன் திரைத்துறையில் புது குரல்வளம் கொண்டவர்களை அறிமுகம் செய்யும் முயற்சியில் இருந்தார். ஓமண்ணக்குட்டி, சுட்டிப்பெண் சித்ராவின் பெயரை முன்மொழிய திரைப்பட பின்னணிப் பாடகியாகப் பிரவேசித்தார்.

தனக்கு முழு நேரப் பின்னணி பாடகியாகும் எண்ணம் முன்பே இருக்கவில்லை என்று நினைத்திருந்தார். பள்ளியிறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபொழுது, கே. ஜே. யேசுதாஸ் அவர்களுடன் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்றார். அவருடைய முதல் திரைப்படப்பாடல் வெளிவரும் முன்னரே அந்தப் பாடல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து யேசுதாசுடன் பல மேடை நிகழ்ச்சிகளிலும், ‘தரங்கிணி’ பதிப்புகளிலும் சித்ராவிற்கு பாடும் வாய்ப்புகள் வந்தன. தரங்கிணிக்கு வந்த இசையமைப்பாளர்கள் அப்புதுக் குரலால் ஈர்க்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவரை நாடி வாய்ப்புகள் தொடந்து வந்தன. திருவனந்தபுரத்தை விட்டு சென்னைக்கு வந்து குடிபெயர்ந்தால் கணக்கற்ற வாய்ப்புகள் பெற இயலும் என்று இசையமைப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து சித்ராவிடம் வலியுறுத்தி வந்தார்.

முகமறியாத இடத்திற்கு வர முதலில் சித்ராவிற்கு விருப்பமில்லை. ஒரு முறை ‘குஷி ஔர் குஷி’ என்ற ஹிந்தி திரைப்படத்திற்கு எஸ். பி. வெங்கடேஷ் எழுதிய ஒரு பாடலை பி.பி.சீனிவாசுடன் இணைந்து பாடுவதற்காக சென்னைக்கு வந்திருந்தார். அந்தத் திரைப்படம் வெளியிடப்படவில்லை.

ஒரு முறை இயக்குனர் பாசில் தம்முடைய நோக்காத தூரத்து கண்ணும் நட்டு என்ற வெற்றிப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்ய விரும்பினார். அந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்த இளையராஜா சித்ராவிற்கு அழைப்பு விடுத்தார். இளையராஜாவின் இசையமைப்பில் ‘நீ தானா அந்தக் குயில்’ என்ற திரைப்படத்தில் அவர் பாடிய ‘பூஜைக்கேத்த பூவிது’, ‘கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட ‘ என்ற இரு பாடல்களும் அவருக்கு புதிய இசையுலகிற்கு திறவுகோலாக அமைந்தன. 1985 ஆம் ஆண்டில் இளையராஜாவின் இசையமைப்பில் சித்ரா பாடிய பல பாடல்கள் (‘கீதாஞ்சலி ‘ திரைப்படத்தில் ‘துள்ளி எழுந்தது பாட்டு, சின்னக்குயிலிசை கேட்டு’, வைரமுத்துவின் ‘ஒரு ஜீவன் அழைத்தது ‘ ஆகிய பாடல்கள் சித்ராவின் இனிய குரலில் உயிர் பெற்றெழுந்தன. தமிழ் சேவையால் சூட்டப்பட்ட ‘சின்னக்குயில் சித்ரா’ என்ற பெயர் நிலைத்தது. அறிமுகப்படுத்தப்பட்ட அதே ஆண்டு ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ‘நானொரு சிந்து காவடிச்சிந்து’, ‘பாடறியேன் படிப்பறியேன்’ போன்ற பாடல்களை சிந்து பைரவியில் மிகச் சிறப்பாகப் பாடி தேசிய விருதைப் பெற்றார். சித்ராவின் திறமையை வெளிக் கொண்டு வந்ததில் இளையராஜாவின் பங்கும் அடங்கியிருக்கிறது.

அடுத்து 1985-1986ஆம் ஆண்டில், இளையராஜாவின் இசையமைப்பில் சித்ரா பாடிய பல பாடல்கள் வெற்றியடைந்தன. இதைத் தொடர்ந்து. இசையமைப்பாளர்கள் பலரும் தம் பாடல்களுக்கு உயிரூட்ட சித்ராவின் குரலைப் பயன்படுத்தினர். சித்ராவுடன் தமிழில் முதலில் பாடிய கங்கை அமரன், மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், சங்கர் – கணேஷ் ஆகியோர் இசையமைப்பிலும் அநேக பாடல்கள் பாடியிருக்கிறார் சித்ரா

அவர் தன் தாய் மொழியான மலையாளத்தில் பல பக்திப்பாடல் தொகுப்புகளில் பாடியுள்ளார். அவை கேரளக் கோவில்களில் திருவிழாக் காலங்களில் ஒலி பரப்பப்படுகின்றன. ‘சலீல் சௌத்ரி’ யின் இசையமைப்பில் உண்ணி மேனனும், சித்ராவும் ‘ஸ்வர்ணரேக’ என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளனர். தமிழில் ‘அன்னை மூகாம்பிகையே’ என்ற தொகுப்பும், சுவாதித் திருநாளின் பதங்களின் தொகுப்பான ‘என்சாண்டிங் மெலடீஸ்’ என்ற பாடலும்ம், ‘ ‘ கிருஷ்ணபிரியா’வும் அவருடைய மற்ற தொகுப்புகளாக வெளி வந்துள்ளன. எம். சுப்புலட்சுமியின் நினைவிற்கு ஒரு அஞ்சலியாக ‘மை டிரிபியூட்’ என்னும் தொகுப்பில் எம்.எஸ் பாடி அமரத்துவம் பெற்ற ‘குறை ஒன்றும் இல்லை’ , ‘பாவயாமி ரகுராமம்’ , ‘காற்றினிலே வரும் கீதம்’ போன்ற பாடல்களைப் பாடியதோடு, ‘சுனாமி’ வெள்ள நிவாரண நிதிக்காக உஷா உதுப்பின் ‘வி பிலீவ் இன் நவ்’ என்ற தொகுப்பிலும் பாடியுள்ளார்.

‘ஸ்ருதி’ என்று பெயரில் சாலிகிராமத்தில் தன் கணவர் விஜய ஷங்கருடன் வசிக்கிறார். அவர் பொறியியல் வல்லுனர்.சித்ராவின் சகோதரரும், சகோதரியும் பெற்றோரின் மறைவிற்குப் பிறகு வெளிநாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வாழ்கிறார்கள்.

இவருக்கு திருமணமாகி பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நந்தனா எனும் பெண் பிறந்தார். 14 ஏப்ரல் 2011 அன்று துபாயில் உள்ள ஒரு செயற்கை நீச்சல் குளத்தில் ஏற்பட்ட விபத்தில் நந்தனா உயிரிழந்தார்.