
வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை பார்க்கிறார் தம்பி ராமையா. அவரது மகன் சூர்யா, அப்பா பணிபுரியும் அலுவகத்தில் பெரிய அதிகாரியாக வேண்டும் என்று அதற்காக முயற்சி செய்து வருகிறார்.
வருமான வரித்துறை சோதனை நடத்திய இடத்தில் சுரேஷ் மேனன் லஞ்சம் வாங்குகிறார். இதனை தம்பி ராமையா பார்த்து, மேல் அலுவலகத்திற்கு போட்டுக் கொடுக்கிறார். இதனால் தம்பி ராமையா மீது கடுப்பில் இருக்கும் சுரேஷ் மேனன், அதனை வருமான வரித்துறைக்கு முயற்சி செய்யும் சூர்யா மீது காட்டுகிறார்.
அதேநேரத்தில் சூர்யாவின் நண்பனான கலையரசனும் போலீஸ் வேலைக்கு முயற்சி செய்து லஞ்சம் கொடுக்க முடியாமல் அந்த வாய்ப்பை இழக்கிறார். தனது கணவனுக்கு வேலையில்லாததை கலையரசனின் மனைவி குத்திக்காட்ட இருவருக்கும் இடையேயான பிரச்சனையில் கலையரசன் தற்கொலை செய்துகொள்கிறார்.
தனது நண்பனின் மறைவால் மனம் நொந்து போகம் சூர்யா, ரகசிய குழு ஒன்றை தொடங்குகிறார். அதில் ரம்யா கிருஷ்ணன், செந்தில், மாஸ்டர் சிவ சங்கர், சத்யன் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.
அதேநேரத்தில் சூர்யாவுக்கும், கீர்த்தி சுரேஷ்க்கும் இடையே காதல் வருகிறது.
பின்னர் தனது குழு மூலம் வருமான வரி செலுத்தாமல் இருப்பவர்களை தேர்ந்தெடுத்து, சுரேஷ் மேனன் பெயரை பயன்படுத்தி அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரியாக நடித்து பணத்தை கொள்ளை அடிக்கிறார் சூர்யா. இவர்களை கண்டுபிடிக்க ஒரு அமைக்கப்படுகிறது. அதற்கு தலைமை ஏற்கிறார் நவரச நாயகன் கார்த்தி.
கடைசியில் சூர்யா அந்த பணத்தை என்ன செய்தார்? சூர்யாவின் கூட்டம் வெற்றி பெற்றதா? கடைசியில் சூர்யா வருமான வரித்துறை அதிகாரியானாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
சில வருடங்களுக்கு பிறகு அமைதியான, கலகலப்பான, புதுமையான சூர்யாவை படத்தில் பார்க்க முடிகிறது. சமீபத்தில் வெளியான அவரது படங்களில் அவரது சக்தி முழுவதையும் பயன்படுத்தி கத்திக் கொண்டிருந்த சூர்யா இதில் பயபக்தியுடன் இருப்பத போல் தோன்றுகிறார். குடும்ப பெண்ணாக கீர்த்தி சுரேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். கார்த்திக் அவரது ஸ்டைலில் வந்து அசத்துகிறார்.
முதல் காட்சியில் மிரட்டும் ரம்யா கிருஷ்ணன், அடுத்த காட்சிகளில் புஷ் என ஆவதும், அதேநேரத்தில் ஒரு குடும்ப பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு திரையில் வரும் செந்தில் காமெடி ஓ.கே.கலையரசன், நந்தா, சத்யன், ஆனந்த்ராஜ் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். யோகி பாபு காமெடியில் சிரிக்க வைக்கிறார். தம்பி ராமையா, சுரேஷ் மேனன், பிரம்மானந்தம் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
திறமை இருந்து வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்கள், சந்திக்கும் பிரச்சனைகளை சொல்ல கலகலப்பாக காட்டியிருக்கும் விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுக்கள். முதல் பாதியில் திரைக்கதை மெதுவாக சென்றாலும், இரண்டாவது பாதியில் வேகம் காட்டியிருப்பது சிறப்பு.
அனிருத்தின் இசையில் பாடல்கள் செம ஹிட். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் புத்துணர்ச்சி அளிக்கின்றன.
ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் `தானா சேர்ந்த கூட்டம்’ வேலையில்லா திண்டாட்டம், நமக்கு படம் கொண்டாட்டம். Rank 4/5