Friday, January 17
Shadow

விரைவில் பா பாண்டி 2 மற்றும் வி.ஐ.பி – 3 தகவலை வெளியிட்டார் தனுஷ்

கலைப்புலி எஸ் தானுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் வி.ஐ.பி -2 படத்தில் தனுஷ் மற்றும் கஜோல் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்க இவர்களுடன் வி.ஐ.பி முதல் பாகத்தில் நடித்த சமுத்திரகனி, அமலா பால், சரண்யா பொன்வண்ணன் மற்றும் விவேக் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் கதையை நடிகர் தனுஷ் எழுதியுள்ளார், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்ற மாதம் 25 ஆம் தேதி மும்பையில் மிக பிரம்மண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டான நிலையில் படத்தின் டிரெய்லர் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இன்று இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் தனுஷ், கஜோல், சமுத்திரகனியுடன் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மற்றும் படத்தொகுப்பாளர் ஜி.கே.பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய தனுஷ், “வி.ஐ.பி-1 மற்றும் வி.ஐ.பி-2 பாகம் என இரண்டுமே ஒரு கதா நாயகனையோ, கதா நாயகியோ மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் அல்ல, தாய் பாசத்தை அடிப்படையாக கொண்ட படம். மேலும் வி.ஐ.பி படம் இரண்டாம் பாகத்துடன் முடிவடைந்து விடாது மேலும் 3, 4 ஆம் பாகம் என தொடரும்” என்று கூறினார். மேலும் பவர்பாண்டி போன்ற உணர்பூர்வமான படங்களிலும் கவனம் செலுத்தும் தனுஷ் பவர்பாண்டி படத்தின் 2-ஆம் பாகத்தை எதிரிபார்க்கலாம் என்று நம்பிக்கையளித்தார். நிகழ்ச்சியில் தொழில்நுட்ப கலைஞர்களை பற்றிய தனுஷ், “முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்தின் கதையம்சம் சற்று மாறுபட்ட கோணத்தில் பார்க்கப்பட வேண்டியது என்பதால் ஷான் ரோல்டனின் இசையை தேர்ந்தெடுத்தேன். படத்தொகுப்பாளர் பிரசன்னா எனக்கு மாரி, பவர்பாண்டி போன்ற படங்களில் மிகச்சிறப்பான பணியை செய்து கொடுத்தார். அவரின் படத்தொகுப்பில் டீசர் மற்றும் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வி.ஐ.பி-2 படம் வருகிற ஜூலை 28 ஆம் தேதி, எனது பிறந்த நாளன்று வெளியாவது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது”, என்றும் அவர் கூறினார்.

இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசுகையில், “தனுஷ் எனக்கு ஒரு நல்ல மெண்ட்டார், எனக்கு சீனியர். அவருடன் பணியாற்றும் போது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். வி.ஐ.பி படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், தனுஷ் மற்றும் கஜோல் மேடத்திற்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று கூறியுள்ளார்.

கஜோல் பேசுகையில், “இருபது வருடம் கழித்து மீண்டும் தமிழில் நடிக்கிறேன், வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி. இன்றைய சினிமா வேறு தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே புது புது விஷயங்களை கற்றுக் கொள்ளவேண்டும். இன்றைய சினிமா ஒரு குறிப்பிட்ட மொழி ரசிகர்களை மட்டுமே சென்றடைவதில்லை. எனவே தரமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். இனி வரும் காலங்களில் தமிழ் சினிமாவிலும் நடிப்பேன்”. என்று அவர் கூறினார்.

நடிகர் சமுத்திரகனி, “தம்பி தனுஷூடன் இணைந்து நான் நடித்த வி.ஐ.பி முதல் பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமும் மிகச்சிறப்பாக உருவாகியுள்ளது. இப்படத்திலும் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.” என்று கூறினார். தனுஷ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தின் அனுபவம் பற்றி பேசிய அவர், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படத்தில் அவருடன் இணைந்து நடித்த முதல் அந்த ஒரு காட்சியிலேயே நான் பிறவி பலனை அடைந்ததாக உணர்கிறேன்.” என்றார்.

Leave a Reply