Monday, April 27
Shadow

வாழும்போதும் ஸ்ரீதேவி நிம்மதியாக இல்லை – பிரபல இயக்குநர் வருத்தம்

நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீதேவியின் மறைவு குறித்து பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா சமூக வலைதளத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஸ்ரீதேவி மரணச் செய்தி கேட்டு அதிர்ந்து போனேன். ஒருவரது வாழ்க்கை வெளியில் இருந்து பார்க்க பொறாமைப்படக் கூடியதாக தெரியும். ஆனால் அதன் மறுமுகம் வேதனையாக கூட இருக்கலாம். ஸ்ரீதேவியின் வாழ்க்கை அதற்கு உதாரணம்.

ஸ்ரீதேவி ஒரு கூண்டுக்கிளி போன்று சுதந்திரம் இல்லாமல் வாழ்ந்தார். தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது இல்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சோகங்கள் அவர் மனதில் காயத்தை ஏற்படுத்தின. அதில் இருந்து அவர் நிம்மதியாகவே இல்லை. கேமிராவுக்கு முன்பு நடிக்கும் போது மட்டுமே ஸ்ரீதேவி நிம்மதியாக இருந்தார். ஸ்ரீதேவியின் வாழ்க்கை அழகானது என்றே பலரும் நினைத்தனர். அழகு முகம், அற்புதமான திறமை, 2 அழகான மகள்களுடன் நல்ல குடும்பம். அவருக்கு என்ன குறை என்று பலரும் அவரை பார்த்து பொறாமைப்பட்டனர். ஸ்ரீதேவியின் தந்தை இருக்கும் வரை அவர் சிறகடித்து பறந்தார். அதன் பிறகு அவரின் தாயால் கூண்டு கிளியாகி விட்டார்.

ஸ்ரீதேவியின் தாய் சில தவறான முதலீடுகள் செய்து நஷ்டம் அடைந்தார். இதனால் ஸ்ரீதேவி கிட்டத்தட்ட பணம் இல்லாமல் இருந்த போதுதான் போனிகபூர் அவர் வாழ்க்கையில் வந்தார். போனிகபூரும் அப்போது கடனில் இருந்தார். அவரிடம் இருந்ததெல்லாம் ஸ்ரீதேவி சாய்ந்து அழ தோள்கள் மட்டுமே. போனிகபூரின் கடன், எதிர்காலத்தை பற்றிய கவலை, குடும்ப வாழ்க்கையில் சொல்லில் அடங்காத பிரச்சினைகள் பல இருந்தன.

ஸ்ரீதேவி மரணத்தில் சுற்றி எழுந்து இருக்கும் யூகங்களுக்கு அப்பாற்பட்டு அவரது தனிப்பட்ட வாழ்க்கையை சம்பந்தப்படுத்தி பார்க்கும் போது அவருக்கு ‘ரெஸ்ட் இன் பீஸ்’ சொல்ல தோன்றுகிறது. பெரும்பாலும் நான் யாருடைய மறைவுக்கும் சொல்வது இல்லை. ஆனால் ஸ்ரீதேவிக்கு இது பொருத்தமாகவே இருக்கும். முதல் முறையாக அவர் தன் வாழ்வில் அமைதியாக இருக்கிறார் என்று சொல்வதா? இல்லை, மரணத்தில் அமைதியாக இருக்கிறார் என்று சொல்வதா? என தெரியவில்லை.