கடந்த மாதம் 31ஆம் தேதி வரை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்தார் ரஜினி. அப்போது தனது அரசியல் பிரவேசத்தையும் அறிவித்தார். அதற்கு முன் மீடியாக்களைப் பார்த்துதான் தனக்குப் பயம் என்று தெரிவித்தார்.
அப்போது, ‘ரெண்டு நாளைக்கு முன்னாடி கார்ல போகும்போது மைக்கை நீட்டி, ‘உங்க கொள்கைகள் என்ன?’னு ஒருத்தர் கேட்டார். என்னது கொள்கைகளா? எனக்கு ரெண்டு நிமிஷம் தலை சுத்திருச்சு…’ என்றார்.
ரஜினியின் இந்த வார்த்தையைக் கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டனர். ‘எனக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு’ என்பது இந்திய அளவில் சில நாட்களுக்கு முன்பு டிரெண்டானது.
இந்நிலையில், இந்த வார்த்தையை வைத்து ஒரு பாடல் உருவாகியுள்ளது. சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘தாதா 87’. விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு, ‘ஒரு நிமிஷம் தலை சுத்தும்’ என்ற பாடலை புரோமோ பாடலாக எழுதியுள்ளார் இயக்குநர்.
இந்தப் பாடலுக்கு லியாண்டர் லீ இசையமைக்க, ஜனகராஜ் மகன் நவீன் ஜனகராஜ் பாடியுள்ளார். பொங்கல் விருந்தாக இந்தப் பாடல் வெளியாக இருக்கிறது.