
ரஜினியுடன் மீண்டும் சிம்ரன்… ‘தர்மன்’ மூலம் நீண்ட நாள் கனவு நனவானது; “என் திரைப்பயணம் முழுமை பெற்றது” என நெகிழ்ச்சி
சென்னை:
தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக முன்னணி நடிகையாக தனக்கென தனி இடத்தைத் தக்கவைத்திருக்கும் நடிகை சிம்ரன், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த வாய்ப்பை தனது திரைப்பயணத்தின் மிக முக்கியமான அத்தியாயமாகக் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், படத்தில் சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சிம்ரன் கூறியதாவது:
“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்து நடிப்பது என் நீண்ட நாள் கனவு. ‘பேட்ட’ படத்தில் அவருடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தாலும், இப்போது ‘தர்மன்’ திரைப்படத்தில் இன்னும் வலுவான கதாபாத்திரத்தில் மீண்டும் அவருடன் பணியாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கிய ரஜினிகாந்த் சார், கமல்ஹாசன் சார், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், முழு படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
மேலும், தனது நீண்டகால பயணத்தில் உறுதுணையாக இருந்த ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.
“என் மீது தொடர்ந்து அன்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் ரசிகர்களும், ஊடக நண்பர்களும் தான் ஒவ்வொரு புதிய முயற்சியையும் உற்சாகத்துடன் தொடங்க எனக்கு ஊக்கமாக உள்ளனர். ‘கேளுங்கள்… நம்புங்கள்… இந்த பிரபஞ்சம் நீங்கள் நினைக்காத விதத்தில் பதிலளிக்கும்’ என்ற நம்பிக்கையுடன், இந்த புதிய அத்தியாயத்தை மகிழ்ச்சியுடன் தொடங்குகிறேன். ரஜினி சாருடன் மீண்டும் இணையும் இந்த வாய்ப்பு என் திரைப்பயணத்தை முழுமை பெறச் செய்துள்ளது,” என்றார்.
1997-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி வெளியான ‘ஒன்ஸ் மோர்’ மற்றும் ‘வி.ஐ.பி.’ திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிம்ரன், அதன் பின்னர் எண்ணற்ற வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கதாநாயகி மட்டுமல்லாமல், காலத்திற்கேற்ப வித்தியாசமான மற்றும் சவாலான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து தனது நடிப்புத் திறனை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.
நடிகை, இல்லத்தரசி, தாய் மற்றும் தொழில்முனைவோர் என பல்வேறு பொறுப்புகளை சமநிலையுடன் மேற்கொண்டு வரும் சிம்ரன், இன்றும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைத் தக்கவைத்திருப்பது அவரது தொழில்முறை அர்ப்பணிப்புக்கும், தொடர்ந்து தன்னை புதுப்பித்துக் கொள்ளும் மனப்பக்குவத்திற்கும் சான்றாக பார்க்கப்படுகிறது.
‘தர்மன்’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் மீண்டும் இணையும் சிம்ரனின் இந்த புதிய திரைப்பயணம், அவரது கலை வாழ்க்கையில் மேலும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் நிலவுகிறது.

Simran Calls Starring in Rajinikanth’s ‘Dharman’ a Career-Defining Milestone: “My Cinematic Journey Feels Complete”
Chennai:
Veteran actress Simran, who has remained one of Tamil cinema’s most celebrated stars for nearly three decades, has described her role in Superstar Rajinikanth’s upcoming film Dharman as one of the most significant milestones of her career.
Directed by Ashwath Marimuthu and produced by Raaj Kamal Films International, Dharman is among the most anticipated Tamil films currently in production. Simran’s inclusion in a pivotal role has further heightened excitement surrounding the project.
Sharing her thoughts, Simran said:
“Working alongside Superstar Rajinikanth sir in a significant role has always been one of my biggest dreams. Although I had the opportunity to share screen space with him in Petta, my role was relatively brief but remains an unforgettable experience. Today, I am truly delighted to reunite with him in Dharman in a much more substantial and meaningful character.
I sincerely thank Rajinikanth sir, Kamal Haasan sir, director Ashwath Marimuthu, Raaj Kamal Films International, and the entire team for giving me this wonderful opportunity.”
The actress also expressed heartfelt gratitude to her fans, journalists, and the media for their unwavering support throughout her career.
“The love and encouragement I have received from my fans and the media have been my greatest strength. Their support inspires me to embrace every new chapter with renewed enthusiasm. I have always believed that if you ask, believe, and trust the universe, it responds in ways you never imagine. With immense gratitude and happiness, I am stepping into this beautiful new chapter. Reuniting with Rajinikanth sir in Dharman has made my cinematic journey feel complete,” she added.
Simran made her Tamil cinema debut on July 4, 1997, with Once More and VIP, and quickly established herself as one of the industry’s leading actresses. Over the years, she has successfully reinvented herself by taking on diverse and challenging roles, earning acclaim across generations of audiences.
Balancing her roles as an actress, homemaker, mother, and entrepreneur, Simran continues to enjoy immense popularity and respect in the industry. Her commitment to evolving with changing times has helped her maintain a remarkable presence in Tamil cinema for nearly three decades.
With Dharman, Simran’s reunion with Rajinikanth is expected to mark yet another memorable chapter in her illustrious career, adding to the growing anticipation surrounding the film.
