
உலக அளவில் மீடியா துறையில், சின்னத்திரை தயாரிப்பிலிருந்து, சினிமா தயாரிப்பிற்கு சென்று மாபெரும் வெற்றி பெறும் கலாச்சாரம் என்றுமே இருந்துள்ளது. அதே பாணியில் பல்வேறு பிரபல தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் தயாரிப்பில் ஈடுபட்ட பிரபல நிறுவனமான `ஹோம் மூவி மேக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ தமிழ் சினிமாவில் கால் பதிக்கவுள்ளனர்.
அவர்களது முதல் தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்க, ஆக்ஷன் மற்றும் குடும்ப பாங்கான படங்கள் என பல தரப்பட்ட படங்களிலும் கலக்கி முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
சரண், மிஸ்கின் மற்றும் அமீர் உள்ளிட்ட பிரபல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கார்த்திக் தங்கவேல் இயக்கும் இந்த படத்திற்கு `அடங்க மறு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.
இப்படம் குறித்து, `ஹோம் மூவி மேக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் உரிமையாளர் சுஜாதா விஜயகுமார் பேசுகையில்,
” மக்களின் பேராதரவோடு எங்கள் நிறுவனம் சின்னத்திரை தயாரிப்பில் இவ்வளவு காலமாக பெரும் வெற்றி பெற்று நன்பெயரை சம்பாதித்துள்ளது. இந்த வெற்றிப் பயணத்தை `அடங்க மறு’ படம் மூலம் வெள்ளித்திரையிலும் தொடர முனைந்துள்ளோம். இப்படத்தில் ஜெயம் ரவியுடன் பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி. ‘மாஸ்’ மற்றும் ‘கிளாஸ்’ என இரண்டு தரப்பினரும் ரசிக்கும் நடிகர் அவர். இப்பட இயக்குனர் கார்த்திக் தங்கவேலுக்கு இது முதல் படமாக இருந்தாலும் உதவி இயக்குனராக நல்ல அனுபவம் பெற்றவர்.

கதாநாயகியாக நடிப்பவர் ராஷி கண்ணா. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இந்த புதிய தொடக்கத்தின் மூலம் பல புதிய திறமைகளை ஆதரவளித்து அவர்களோடு பணியாற்ற இருக்கிறோம்.
`அடங்க மறு’ படத்தின் இணை தயாரிப்பாளர் – ஆனந்த் ஜாய், ஒளிப்பதிவாளர் – சத்யன் சூர்யன், இசையமைப்பாளர் – சாம்.சி.எஸ்., எடிட்டிங் – ரூபன், வசனம் – விஜி, கலை இயக்குனர் – லால்குடி இளையராஜா, சண்டை பயிற்சியாளர் – ஸ்டண்ட் சிவா, நடன இயக்குனர் – பிருந்தா. சென்னையில் இன்று ஒரு எளிமையான விழாவோடு `அடங்க மறு’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது என்றார்.
