லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரியான ராஜூ மகாலிங்கம் ரஜினிகாந்தின் அரசியல் கட்சியில் இணைவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லைகா நிறுவனத்தில் இந்திய தலைமை அதிகாரியாகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் ராஜூ மகாலிங்கம். லைகா நிறுவனம் சார்பில் ரூ. 450 கோடி செலவில் 2.0 படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். இவரது தீவிர ரசிகரான லைகா புரொடக்ஷன்ஸின் ராஜூ மகாலிங்கம், ரஜினியின் கட்சியில் இணைவதற்காக லைகா நிறுவனத்தில் தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ராஜூ மகாலிங்கம் அளித்துள்ள பேட்டியில், ‘’முதலில் நான் ரஜினி சாரின் ரசிகர். கடந்த மூன்று ஆண்டுகளாக 2.0 படம் எடுக்கும்போது அவரை உடன் இருந்து கூர்ந்து கவனித்து வந்துள்ளேன். எளிமை, நேர்மை, வெளிப்படைத்தன்மை என்றால், ரஜினி சார்தான். தற்போது தமிழகத்திற்கு தேவைப்படும் அனைத்து குணங்களும் அவரிடம் உள்ளது. ரஜினி சார் கட்சியில் நான் தற்போது எந்தப் பொறுப்பிலும் இல்லை. உறுப்பினராக சேர்ந்து உள்ளேன்’’ என்றார்.